ஒரு பாட்டுக் குயில்கள் ( முகமறியாத குரல் அபூர்வங்கள்) – கணேசகுமாரன்

பல்லாயிரக்கணக்கான பாடல்கள் இல்லை. ஒரே பாடல் பாடிவிட்டு பின் ஏதேதோ காரணங்களால் சினிமாவில் பாடாமல் போன அபூர்வமான குரல்களின் தொகுப்பு இங்கே. எவ்வளவு காலமானாலும் நம் செவிகளை விட்டு அகலாத முகம் தெரியாத குரல் வழியே நம்முடன் வாழும் இன்னிசைக் குரல்கள் இவை.

மித்தாலி – காலத்துக்கும் நம் செவி விட்டு அகலாத தளபதி படத்துப் பாடல்களில் ஒரு சிறு பிட்டாக வந்த பாடல் யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடல். இரண்டு வெர்சனாக வரும் பாடலை மித்தாலி என்ற பாடகி பாடியிருப்பார். இந்துஸ்தானி பாடகியான இவர் அந்த ஒரு பாடலுக்குப் பிறகு வேறெந்த தமிழ்ப் பாடலும் பாடவில்லை. ஆனால் காற்றில் மிதக்கும் யமுனை ஆற்றிலே என்றைக்கும்.

சூலமங்கலம் முரளி – இளையராஜாவின் மாயாஜால இசையுடன் தொடங்கும் மென்மையான பாடல் கழுகு படத்தில் இடம்பெற்ற காதல் என்னும் கோவில் பாடல். சூலமங்கலம் முரளி பாடிய பாடல். இந்தப் பாடலுக்குப் பிறகு சூலமங்கலம் முரளி பாடியதெல்லாம் பக்திப் பாடல்களே. அபூர்வங்கள் எல்லாம் அடிக்கடி நிகழ்வதில்லையே.

ரமேஷ் – இளையராஜா அறிமுகப்படுத்திய பல அற்புதங்கள் ஏனோ ஒரு பாடலுடன் நின்றுவிட்டன. பகல் நிலவு படத்தில் இடம்பெற்ற வாராயோ வான்மதி பாடலைப் பாடிய ரமேஷின் ஒன்டைம் மெஸ்மரிசம் இது. இணைந்து பாடிய உஷா ஸ்ரீனிவாசனுக்கும் இது ஒன்டைம் மெலோடியே. நானே ராஜா நானே மந்திரியின் கேளாயோ கண்ணா பாடலில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தாலும் பி. சுசிலா பாடிய வெர்சன் மட்டுமே உள்ளது. ரமேஷும் ஆன்மிகப் பாடல்களில் கவனம் செலுத்தி சினிமா பாடலைத் தவிர்த்துவிட்டார். நிம்மதி தந்த குரல்களே சன்னிதி.

மஞ்சுளா – என்றைக்குமான ஒரு காதல் மெலடியைத் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டவர் மஞ்சுளா. நல்லவனுக்கு நல்லவன் படத்தில் கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து பாடிய உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் டூயட் காலம் தாண்டியும் காதில் ஒலிக்கும் தேன்கானம். கன்னடத்தில் பிரபலமான பாடகியாகிவிட்டாலும் ஏனோ அதன் பின்பு தமிழில் அவர் பாடல் எதுவும் பாடவில்லை. எல்லா இரவிலும் ஆறுதல் சொல்ல ஒரு குரல். ஒரு பாடல்.

சுமங்கலி – கருத்தம்மா படத்தில் மின்மினி ஷாகுல் அமீது இணைந்து பாடிய பச்சைக்கிளி பாடும் ஊரு பாடலின் மெட்டிலேயே இன்னொரு பாடல் ரஹ்மானின் இசையிலே வந்தது. அந்தி மந்தாரை என்ற தேசிய விருது வென்ற படத்தில் இடம்பெற்ற புல்லு தின்னும் புள்ளதாச்சி பொட்டு வச்ச முத்துபேச்சி பாடல் பாடிய சுமங்கலிக்கு கொஞ்சம் மின்மினியின் ஹரிணியின் குரல்களின் சாயல். அந்தக் குரல் நிறைய பாடல்கள் பாடியிருக்கலாம். இன்னொரு மின்மினியாக வலம் வந்திருக்கலாம். காலம் அதிசயங்களை ஒருமுறைதான் நிகழ்த்துகிறது.

செளம்யா – கர்நாடக பாடகி செளம்யா பாடிய ஒரே தமிழ்ப் பாடல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கார்த்திக் ராஜா இசையில் கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா பாடல். சங்கீத கலாநிதி பட்டம் வென்ற செளம்யாவின் குரல் சினிமாவுக்காக ஒலித்தது இந்த ஒரு பாடலில்தான். மழை ஓய்ந்த இரவின் தனிமையில் செவிகளை வருடும் இந்தக் குரல் நம்மை இன்னொரு இசை உலகுக்கு அழைத்துச் செல்வதை காதுள்ளவர்கள் உணரக்கூடும்.

கிருஷ்ணமூர்த்தி – அரண்மனைக்கிளி படத்தில் இடம்பெறாத அதே சமயம் ஆடியோவில் இடம்பெற்ற பிரமாதமான பாடல் இதயமே போகுதே. தனிப்பட்ட வசீகரத்துடன் பாடலைப் பாடிய கிருஷ்ணமூர்த்தி ஒரு மறைந்த மேஜிக் நிகழ்த்தியவர் எனலாம். படத்தில் இடம் பெறாதது மட்டுமல்ல…அவரைப் பற்றி வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் எப்போதாவது காற்றில் இடறும் அந்தக் குரலின் சோகமும் ஏக்கமும் கிருஷ்ணமூர்த்தியின் பெயரைத் தேடுகிறது.

சோபா சங்கர் – ரஹ்மானின் அறிமுகம். சூப்பர் டூப்பர் ஹிட் பாடலுடன் வந்தவர். மே மாதம் படத்தின் மார்கழிப் பூவே ஒலிக்காத இடமில்லை. கேட்காத செவிகள் இல்லை. ஆனாலும் சோபா சங்கர் வேறு எந்தப் பாடலும் பாடவில்லை. தேடினாலும் கிடைக்கவில்லை. மார்கழி பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் என்ற குளிர் குரல் மட்டும் நம் நெஞ்சுக்குள் உறைந்து கிடக்கிறது.

ரஜினிகாந்த் – நண்பர்களின் வற்புறுத்தலுக்காக கூட மன்னன் படத்தில் அடிக்குது குளிரு பாடலை ரஜினிகாந்த் பாடியிருக்கலாம். பாடியிருக்கலாம் என்பதையும் தயக்கத்துடன் எழுத வைத்தாலும் சூப்பர் ஸ்டாரின் ஒரே பாடல் என்ற தகுதியைப் பெற்று பட்டியலில் இடம்பெற்றுவிட்டது அடிக்கும் குளிர். ஆனாலும் முகம் காட்டிய ஒரே குரல் இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *