ஆதிபுருஷ்- விதியின் விளையாட்டு- திரைப்பார்வை – கணேசகுமாரன்

படத்துக்குப் பொருத்தமான தலைப்பாக சீதாபுருஷ் என்று வைத்திருக்கலாம். ராமனின் பால்யகால சாகசங்கள் சுயம்வர நிகழ்வுகளை விடுத்து சீதாவை ராவணன் கடத்தும் இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. உலகம் எல்லாம் தெரிந்த ஒரு கதையை மூன்று மணி நேர சினிமாவாக்கும் பொருட்டு அதை எப்படியெல்லாம் வித்தியாசப்படுத்தலாம் என்று அரைமணி நேரம் ரூம் போட்டு யோசித்திருக்கலாம். ராமனை மாயனாக்குகிறேனென்று ராவணனை பேயனாக்கியிருக்கிறார்கள். மழுங்க மழுங்க மீசை வழித்து கிளீன் ஷேவிலேயே பார்த்த ராமனுக்கு அடர்த்தியான கட்டை மீசை வைத்து வித்தியாசப்படுத்த நினைத்த இயக்குநர் மற்ற எதிலும் வித்தியாசம் காட்டவில்லை.

இதுபோன்ற ஃபேன்டசித்தனமான புராண கதைகளைப் படமாக்கும்போது பெரிதும் கை கொடுக்க வேண்டியவை கிராபிக்ஸ். வெகு சொற்பமான இடங்களைத் தவிர பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் பல்லிளிக்கின்றன. முதல் பாதியில் சீதையை ராவணன் கடத்தும் காட்சிகள் சற்றே நீளமாய் இருந்தாலும் போரடிக்கவில்லை. அதுபோல் வாலில் பற்றவைத்த தீ இலங்கையை பஸ்பமாக்கும் காட்சி என அங்கங்கே சுவாரசியம். பாறைகளால் முடியாதது பிரார்த்தனைகளால் முடியும் என அங்கங்கே வசனம் கவனிக்க வைக்கிறது. ஆனால் கண்டேன் சீதையை வசன மாற்றம் ரசிக்க முடியவில்லை.

தன் பலம் தெரியாமல் தன்னை காமெடி பீசாக எண்ணும் சுக்ரீவனுக்கு கொடுக்கப்படும் பில்டப் கூட மற்றவருக்கு இல்லை. சீதா, சூர்ப்பனகை, மண்டோதரி என ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக பெண் கதாபாத்திரங்கள் காட்டப்பட்டிருந்தாலும் அத்தனை பேர் முகத்திலும் தெரியும் வட இந்திய சாயல் டப்பிங் பட வாசனையை தெளிக்கிறது. கீழே கிடந்த எதையோ மிதித்துவிட்டு நகர்வது போலவே படம் முழுவதும் நடிக்கும் ராவணன் சைப் அலிகானும் சரி ஜெய் ஸ்ரீராம் சத்தம் பின்னணியில் ஒலிக்க ஸ்லோமோசனில் மூவாகும் ராமன் பிரபாஸும் சரி கொஞ்சம்கூட ஒட்டவே இல்லை.

ராவணன் படைகளில் ஏலியன் ஜாடை. சுக்ரீவன், வாலி வகையறாக்களில் கிங்காங் ஒப்பனை. சின்னச்சின்ன வானர கூட்டங்களின் சேட்டைகளிலும் ராமனுடன் சண்டையிடும் அடியாட்களிலும் டோமெக்ஸ் நிப்பான் பெயின்ட் பொம்மைகள். சகலவிதமான ஆங்கிலப் படங்களில் இருந்தும் காட்சிகளை உருவியிருக்கிறார் இயக்குநர். ராமனை ராகவ் எனவும் சீதாவை ஜானகி எனவும் மாற்றியதெல்லாம் சரி. லட்சுமணனை ஏன் ஷேஷ் என்று அழைக்கிறார்கள் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். ராவணனின் பத்து தலை மனசாட்சி போல வந்து பேசிப்போவது நல்ல கற்பனை. ஆனால் பத்து தலையும் பத்துக் குரலில் பேசுவது அபத்தம். கடல் தாண்டும் சுக்ரீவனைக் காணும்போது ஏபிடி பார்சல் சர்வீஸ் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ராகவ் (ராமன்) ஒன்றும் கடவுள் இல்லையே… மனிதன் தானே என்று வசனம் வைத்ததற்காக வேண்டுமானாலும் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் இந்தப் படத்தில் அதுவும் முரணாகிறது. படத்தில் ராமனாக வரும் பிரபாஸ் சொல்வதுபோல் ஒரு வசனம் வருகிறது. இது விதியின் விளையாட்டு. அதை மாற்ற முடியாது. படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கும் அதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *