வீரன் – சுமாரான சூப்பர் ஹீரோ – திரைப்பார்வை- கணேசகுமாரன்

பள்ளி திறக்கும் நேரத்துக்கு வந்திருக்கிறது படம். விடுமுறை காலத்தில் வந்திருந்தால் குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாய் இருந்திருக்கும். என்ன ஒன்று குழந்தைகள் மட்டும் கொண்டாடும் படமாய் போனதுதான் படத்தின் மாபெரும் குறையாய் போய்விட்டது. சூப்பர் ஹீரோக்களின் கதையைப் பொறுத்தவரைக்கும் சாதகம் லாஜிக்கெல்லாம் கணக்கில் எடுக்காமல் மேஜிக் மட்டுமே போதும். பாதகம் சூப்பர் ஹீரோக்களுக்கு வரும் சோதனைகள் சாதாரண மனிதனுக்கு வராத ஒன்றாக இருக்க வேண்டும். படத்தில் இரண்டையுமே கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

தலையில் இடி விழுந்து சூப்பர் பவரைப் பெறும் நாயகன் எதற்காக அந்த பவரை உபயோகிக்கிறான் என்பதில் சுவாரசியம் சேர்க்க மறந்துவிட்டார்கள். சொடக்கு போட்டதும் எதிராளியின் மைண்ட் பவரைக் கையகப்படுத்தும் ஹீரோ முதல் சொடுக்குக்கு ஆச்சரியமும் அடுத்தடுத்த சொடுக்குக்கு எரிச்சலும் தருகிறார். பச்சை மஞ்சள் சிகப்பு நீலம் என்று கலர்கலரான கெமிக்கல்கள் தந்து எதிரியை லிக்விட் ஆக்கும் கொடூரமான வில்லன் விநய் இறுதியில் எட்டும் முடிவு இந்தப் படத்தின் சீரியஸ்தன்மையை மொத்தமாய் காலி செய்கிறது.

சூபப்ர் ஹீரோவாய் ஆதி. தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்திருக்கிறார். அந்த ஹீரோயினுக்கு மாப்பிள்ளையாக வரும் கேரக்டர் கலக்கல். அவரின் போர்ஷன் மட்டும் தனியாய் காமெடி களை கட்டுகிறது. முனிஷ்காந்த் காளி வெங்கட் காம்பினேஷன் நகைச்சுவைக்கு என்றே சேர்க்கப்பட்டிருந்தாலும் சில இடங்களில் மட்டுமே ஹாஹா. திருவிழா பாடல் மட்டும் ஓகே என்கிறது. விநய் தம்பியாக வருபவர் கவனம் ஈர்க்கிறார். சிறு தெய்வங்களின் கதை போல் தொடங்கி சிறு குழந்தைகளுக்கான படமாய் முடிகிறது வீரன்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *