ALL SONGS SPB – கணேசகுமாரன்

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே… காலமாகி நிற்கும் கலைஞன் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

பாடக, பாடகிகள் அதிகம் பேர் இல்லாத முந்தைய சினிமா காலங்களில் ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் ஒரே பாடகரோ பாடகியோ பாடுவது தவிர்க்க முடியாதது (டி. எம். செளந்திரராஜன், பி. சுசீலா) இளையராஜா வருகைக்குப் பிறகு அறிமுகமான பல பாடகர்களும் தங்கள் தனித்துவத்தில் கோலோச்சினார்கள். பொதுவாய் ஒரு சினிமாவில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் ஒரே பாடகர் பாடுவதென்பது இசையமைப்பாளர் தீர்மானிப்பதுதான். அப்படி இருந்தும் எஸ் பி பாலசுப்ரமணியன் நிறைய படங்களில் அனைத்துப் பாடல்களும் பாடினார். பொதுவாய் நடிகர் மோகன் பாடகராய் மைக் பிடிக்கும் பல படங்களில் அனைத்துப் பாடல்களும் எஸ்பிபிதான். உதாரணமாய் பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம்.

காதல் ஓவியம் படத்தில் ஒரு பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களும் எஸ்பிபி. வெள்ளிச்சலங்கைகள் கொண்ட கலைமகள் என காதல் தாபத்துடன் இசைக்கும் குரலாகட்டும் அம்மா அழகே உலகின் ஒளியே என உயிரில் கரைந்து உருகும் மனமாகட்டும் சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை எனக் கதறும் கனமாகட்டும் எல்லாம் எஸ்பிபியின் ராஜாங்கம். பயணங்கள் முடிவதில்லை திரைப்பட பாடல்கள் எஸ்பிபியின் கச்சேரி எனலாம். ஆத்தா ஆத்தோரமா வாரியா என நக்கலும் நையாண்டியுமாய் குத்துப்பாட்டில் இறங்கி அடித்தும் வைகறையில் வைகைக் கரையில் என கண்ணீர் விசும்பலுடன் இசைத்தும் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ என ஆற்றாமையில் கதறியும் எல்லாவற்றுக்கும் மேலாக இளையநிலா பொழிகிறது என இரவின் தாலாட்டாய் ஒலித்தும் எஸ்பிபி இசைத்தட்டின் எல்லா பக்கங்களிலும் சுழன்றார்.

அதுபோல் ஒரே ஒரு டூயட் பாடலைத் தவிர மற்ற அனைத்து தனிப் பாடல்களும் எஸ்பிபி ஆட்சி செய்த இதயகோவில் முழுமையான ஆல்பம். கூட்டத்திலே கோயில்புறா யாரை இங்கு தேடுதம்மா என காதலியின் முகம் கண்டு பூரித்த மனம் பாடும் பாடலாகட்டும், யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ என சோகமும் ஏக்கமும் கலந்து அலையும் குரலாகட்டும், இதயம் ஒரு கோவில் என கம்பீரமாக வாழ்த்து கூறும் இசையாகட்டும், நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா தொலைந்த காதலியின் ஞாபகத்தில் உருகும் குரல் என எஸ்பிபி எல்லா காதல் மனங்களிலும் ரோஜா மணம் வீசினார்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களிலும் எஸ்பிபியின் மென்மை மட்டுமே ஒலிக்கும். சொல்லப்போனால் படத்தின் நாயகன் ரகுமானின் குணவார்ப்பு அப்படியாக இருக்கும். கேளடி கண்மணி பாடகன் சங்கதியில் தெறிக்கும் ஏக்கமும், கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடலில் மறைந்து ஒலிக்கும் சோகமாகட்டும், குருவாயூரப்பா குருவாயூரப்பா என காதலுக்கு கடவுளைக் சாட்சியாக்கும் உற்சாகமும் என எல்லா பாடல்களும் எக்கச்சக்க மயிலிறகு தடவல். விதிவிலக்காக எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் பாடல்.

கமல்ஹாசனின் பல படங்களுக்கு எஸ்பிபியே ஆல் சாங்க்ஸ். சலங்கை ஒலி, காக்கிச் சட்டை, சிப்பிக்குள் முத்து இன்னும் இன்னும். அதுபோல் ரஜினிகாந்துக்கும் எஸ்பிபி அனைத்துப் பாடல்களும் பாடியுள்ளார். உதாரணம் மாப்பிள்ளை, சிவா இன்னும் இன்னும்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *