கலைஞர் நூற்றாண்டு ஒரு திரைப்பார்வை- கணேசகுமாரன்

1947ல் ஜூபிடர் பிக்சர்ஸில் உதவி எழுத்தராக வேலைக்குச் சேர்ந்த கருணாநிதியின் முதல் படம் அதே ஜூபிடர் பிக்சர்ஸ் வெளியீடான ராஜகுமாரிதான். நாயகனாக எம். ஜி. ராமச்சந்திரன். எந்த எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டி வந்ததோ அதே எம்ஜிஆர் நாயகனாக நடித்த படத்துக்குதான் கலைஞர் மு. கருணாநிதி முதன் முறையாக உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். இந்தக் கால முரண்தான் அரசியலில் அழகு. மல்லிகா என்ற ராஜகுமாரிக்கும் சுகுமார் என்ற ஏழை இளைஞனுக்குமான காதல் கதை ராஜகுமாரி. முதல் படத்திலே கலைஞரின் முத்திரை பதிக்கும் வசனங்கள், கவிதைத் தெறிக்கும் காதல் வசனங்கள் மந்தகாசத் தமிழில் மயக்கின. சுகுமார் நம் உறவு வளைர்பிறை போல் வளரட்டும் என்ற நாயகியின் கூற்றுக்கு பதிலாக நாயகன் ஆமாம் நம் உறவு வானும் வெண்ணிலவும் போல வீணையும் நாதமும் போல வண்ண மலரும் மதுவும் போல வாழும் என்பது கலைஞரின் தமிழ்ப்பற்றுக்கு கிடைத்த சிக்சர் வசனங்கள். நான் பெண்ணில்லையா நான் சிந்துவது கண்ணீரில்லையா என்று ரசிகர்கள் தலையாட்டி ரசிக்க வைக்கும் எளிய வசனங்கள் நிரம்பிய ராஜகுமாரி ஒரு வெற்றிப்படமானது.

மருதநாட்டு இளவரசி படத்தின் கதை வசனம் மு. கருணாநிதி. இதிலும் அதே எம்ஜிஆர்தான் நாயகன். பணக்காரன் வீட்டு மாடுன்னா பயிரை மேய அதிகாரம் உண்டா என அப்போதே அதிகாரத்தை எதிர்த்து கேள்வி ஆரம்பமான படம். இந்தப் படத்தில் எம்ஜிஆரின் இணையாக நடித்த வி. என். ஜானகி பின்பு எம்ஜிஆரின் மனைவியாகி தமிழ்நாட்டின் முதல்வரும் ஆனார். காலம் போடும் புதிர் கணக்குகள் யாருக்கும் புரியாதது. வி. என் ஜானகியிடம் எம்ஜிஆர் பேசும் வசனங்களில் கலைஞரின் பேனா முனை கம்பீரம் தெரியும். உன் கண்களில் பொங்குகிறதே காமம்… உன் உதடுகளின் இடுக்கில் வழிகிறதே நஞ்சு… அழுகல் நாற்றத்துக்குப் பேர் அந்தி மல்லியின் வாடையா…. நரகம் என்ற ஒன்று இருந்தால் உன் நரம்புக்கென்று ஒரு நாகத்தை விட்டு கடிக்கச் செய்வேன். இப்போது கேட்கும்போதும் அந்த வீரியத் தமிழை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ராணி அக்னி அஸ்திரத்தை வீசிப் பார்த்தாய். இப்போது வருணாசிரத்துக்கு வந்திருக்கிறாய். மோகன அஸ்திரத்தை வீசாமல் இளவரசை ஜெயிக்க முடியாது என மேடை நாடகத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் வசனம் ஆட்சி செய்யத் தொடங்கியது.

கதை வசனம் மு. கருணாநிதி என்று டைட்டில் கார்டோடு வந்த படம் மந்திரிகுமாரி. புகழ்பெற்ற எல்லிஸ்.ஆர்.டங்கனின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் கொள்ளையடிக்கும் கலை என்று நடிகர் எஸ். ஏ. நடராஜன் பேசும் வசனம் வாய்ப்பில்லாதது. சொல்லப்போனால் இதிலும் எம்ஜிஆர்தான் ஹீரோ. ஆனால் பெரும் சூப்பர் ஹிட்டான வாராய் நீ வாராய் பாடலுக்கு நடித்ததன் மூலம் எஸ். ஏ. நடராஜனுக்கே அனைத்துப் புகழும் சேர்ந்தது. சுவாமி நம் காதல் வானில் தோன்றிய மின்னல்தானா என மரண விளிம்பில் காதலி கேட்க காதலன், துல்லியமாக பிரகாசிக்கும் துருவ நட்சத்திரம் என்றா நினைத்தாய் என்றபடி மலையிலிருந்து தள்ளிவிட முனைகையில் மரண வாயிலில் பேசுகிற வசனத்தில் கலைஞரின் தமிழ் துள்ளி விளையாடியது. நிறைய ட்விஸ்ட் இருந்த அதே சமயம் படத்தில் பாடல்களும் அதிகம்.

ஒரு சினிமா என்பதையும் தாண்டி பல சாதனைகள் புரிந்த படம் பாரசக்தி. புதிதாய் சினிமா எடுக்க வருபவர்களுக்கும் வசனம் எழுத வருபவர்களுக்கும் மிகச் சிறந்த பாலபாடம் பராசக்தி என்பதில் மிகையில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். இன்னும் எத்தனை காலத்துக்கு எவ்வளவு படங்கள் எடுத்தாலும் இந்தப் படத்தின் கோர்ட் சீன் வசனங்களைக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுமளவுக்கு உழைப்பு. பொளேர் என செவுளில் அறையும் வசனங்களில் சமூகத்தைச் சாடிய ஆச்சரியம். பிச்சைக்காரனாக இருந்தபோதும் திருடனாக இருந்தபோதும் வெட்கப்படாத நீ ஏமாந்த கதையை வெளியில் சொல்ல வெட்கப்படுகிறாய் என்று நாயகனைப் பார்த்து நாயகி கேட்பது சிந்திக்கச் செய்யும் வசன வெளிப்பாடு. சமுதாயமே பிச்சைக்கார மடம், பைத்தியக்கார விடுதி, திருடர் குகை என சமுதாய அவலங்களின் மீது பேனா செய்த யுத்தம் பராசக்தி. ஆகாரத்துக்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் நான் என்பதெல்லாம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைஞனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த வசனம்.

பராசக்தி கோர்ட் சீன் வசனத்துக்கு இணையான வசனங்கள் கொண்ட திரைப்படம் மனோகரா. திரைக்கதை வசனம் மு. கருணாநிதி. வசந்தசேனை என்ற கொடூர மனம் கொண்ட பெண்ணாக வந்த டி. ஆர். ராஜகுமாரியின் நடிப்பு, வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் கர்ஜித்த சிவாஜி கணேசன், உணர்ச்சி பொங்க வசனம் பேசி நியாயம் கேட்ட கண்ணாம்பா என்று எல்லோரும் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகராவுக்கு பொங்கி எழுந்தது திரையரங்கம். வேல்விழி மாதர்களிடம் வீரர்கள் ஜெயித்ததாய் சரித்திரம் இல்லை தேவி என்று காதல் சொட்ட எழுதிய வசனம் என மனோகராவும் தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவாய் ஆயிற்று. பின்பு கலைஞரின் எழுத்து வண்ணத்தில் மலைக்கள்ளன், புதையல், ரங்கோன் ராதா, அரசிளங்குமரி எனப் பல படங்கள் பிரசவமாகின.

இருவர் உள்ளம் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வந்த படம். வரலாற்று மன்னர்களின் வாள் வீச்சுக்கு எழுதி வந்த கலைஞரின் பேனா சமூகப் படமான இருவர் உள்ளத்தில் இளமைத் துள்ளலுடன் விளையாடியது. கல்யாணம் என்பது குறித்து சிவாஜி பேசும் ஆரம்ப வசனங்களே களை கட்டத் தொடங்கிவிடும். சிவாஜிக்கும் சரோஜா தேவிக்கும் இடையிலான கோப தாப வசனங்களை கலைஞரின் பேனா உற்சாகத்துடன் எழுதியிருக்கும். சட்டென்று மனதில் தங்கிவிடும் பல வசனக் குறிப்புகள் உண்டு. நிழல் பட்டு நிலம் தேய்ந்துவிடுவதில்லை என்பது ஒரு சோறு பதம்.

வரலாற்றுக் காப்பியங்களுக்கும் வரலாற்று மன்னர்களுக்கும் எழுதுவதென்றாலே தனி உற்சாகம் கிளம்பிவிடும் கலைஞரின் பேனாவுக்கு. பூம்புகார் காப்பியத்துக்கு வசனம் எழுதுவது குறித்து படம் தொடங்கும் முன்னே ஒரு உரை கலைஞரே திரையில் தோன்றி வழங்குவார். கண்ணகியின் வாழ்க்கைக்கு திரைக்கதை எழுதி வசனம் எழுதியிருப்பார் கலைஞர். மாதவியின் அழகை வர்ணிக்கும் கோவலனின் வார்த்தைகளில் வழிந்து தெறிக்கும் அழகும் தமிழும் கலைஞரின் திறன் கூறும். மாதவிக்கும் கோவலனுக்குமான பிரிவு காட்சியில் வாக்குவாதம் செய்யும் எழுத்து, மணிமேகலை குறித்து கண்ணகியிடம் பேசும் கோவலனின் கண்ணீர் வசனம், க்ளைமாக்ஸில் பாண்டிய மன்னனிடம் நியாயம் கேட்டு அனல் புறப்படும் எழுத்து என கலைஞரின் பேனா பூம்புகார் சினிமாவில் எடுத்தது விஸ்வரூபம்.

என் அன்பு உடன்பிறப்புகளே நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் படைக்கும் திரைக்காவியம் பாலைவன ரோஜாக்கள் என்று கலைஞரின் குரலிலே தொடங்கும் பாலைவன ரோஜாக்கள் திரைப்படம் சத்யராஜ், பிரபு, லட்சுமி, நளினி போன்றவர்களின் உச்சரிப்பில் தமிழ் நடமாட வைத்தது. லட்சியவாதிகள் கொல்லப்படலாம் லட்சியங்கள் அழியாது என்று டைட்டிலுக்கு முன்பே கதைக் கருவைச் சொல்லி ரசிகர்களைத் தயார்படுத்துவார். சத்யராஜின் அறிமுகக் காட்சியிலேயே கலைஞரின் நக்கலும் நையாண்டியும் தொடங்கிவிடும். குடித்துவிட்டு ரிக்‌ஷாவில் படுத்திருக்கும் ரிக்‌ஷாகாரரை வைத்து ரிக்‌ஷாவை மிதித்து வரும் சத்யராஜ் ரிக்‌ஷாகாரருக்குப் பணம் தருவார். அப்போது காலைலேயே இப்டி தண்ணியடிச்சிட்டு படுத்துக் கெடந்தா சீக்கிரமே மந்திரியாக்குனாலும் ஆக்கிடுவாங்க என்பார். கலைஞரின் பேனாவுக்கு என்றுமே வயதாகவில்லை.

பின்பு பல படங்கள் தாண்டி தொடர்ச்சியாக ராதிகாவை நாயகியாக கொண்ட படங்களுக்கு வசனம் எழுதினார். அதில் குறிப்பிடத்தக்க படமாக தென்றல் சுடும், பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள், புயல் பாடும் பாட்டு, நீதிக்குத் தண்டனை போன்ற படங்களைச் சொல்லலாம்.

1947 ல் ராஜகுமாரியில் தொடங்கிய எழுத்துப் பயணம் 2011 ல் வெளியான பொன்னர் சங்கர் வரைக்கும் வெற்றிநடை போட்டது. எம் ஜி ஆர் தொடங்கி பிரசாந்த் வரைக்கும் கலைஞரின் பேனா உருவாக்கிய வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை தலைமுறை தாண்டியும் எல்லோரும் விரும்பும் எழுத்தாக கலைஞரின் எழுத்து இன்றும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *