தனிப்பாட்டு ராஜா – இளையராஜா பிறந்தார் – கணேசகுமாரன்

ராஜா பற்றி பேசுவதற்கு ராஜாவின் பிறந்த நாள் அவசியப்படாது. எல்லா நாளும் அவரைப் பற்றி யாராவது ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். இளையராஜா தனித்துப் பாடிய சில பாடல்கள் பற்றிய சிறு தொகுப்பு இக்கட்டுரை.

மங்களகரமாகத் துவங்கலாம் என்றால் சோளம் விதைக்கையிலே என்ற பதினாறு வயதினிலே டைட்டிலிருந்து தொடங்கலாம். அதிலும் கமல்ஹாசன் கமல்ஹாசனாக அறியப்படும் முன்பும் கமல்ஹாசனுக்காக சினிமா தயாரான பின்பும் அவருக்கான டைட்டில் பாடல்கள் மிகச் சிறப்பானவை. சகலகலா வல்லவனின் அம்மன் கோவில் கிழக்காலே ஒரு விதம் என்றால் மைக்கேல் மதன காமராஜனின் கதை கேளு கதை கேளு இன்னொரு விதம். குணாவின் அப்பன் என்றும் அம்மை என்றும் கனம் கூட்டி படம் பார்க்க நம்மை மனரீதியாக தயார் செய்யும் வித்தைக் குரலாய் மாறியது.

படத்தில் இடம்பெறாமல் ஆடியோவில் மட்டும் வெளியான சில அபூர்வங்களும் உண்டு. ஜப்பானில் கல்யாண ராமன் படத்து இசைத்தட்டில் சுற்றிய காதல் உன் லீலையா என்ற இளையராஜாவின் ரகசியமாய் காதில் சொன்ன காதல் குரல் படத்தில் இல்லை. அறுவடை நாள் படத்து இசைத்தட்டில் ஒலித்த ஒரு காவியம் அரங்கேறும் நேரம் பாடல் ரசிகனின் செவிக்குள் புரிந்த தியானம் காலம் தாண்டி நெஞ்சில் நிற்பது. படிச்ச புள்ள பட ஆடியோவில் வந்து படத்தில் வராத பூங்காற்றே இனி போதும் என்னுடல் தீண்டாதே பாடல் சோகம் கூட சுகமே என்று செவிக்குள் பாடியது. ப்ரியங்கா படத்து ஆடியோவில் இருந்த ஞாபகம் இல்லையோ பாடலின் ஏக்கம் கலந்த வேதனைக் குரல் ராஜாவின் ராஜ சுகம் தரும் ஒன்று. என்னருகில் நீ இருந்தால் படத்தின் நிலவே நீ வரவேண்டும் என்ற பாடலின் ராஜ அழைப்பில் நிலா நிச்சயம் பூமிக்கு வந்திருக்கும்.

பெண்களின் துயர் பேசிய இளையராஜா குரலில் தலை கோதும் விரல்களின் ஸ்பரிசம் கூடும். தென்றல் சுடும் படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா கண்ணம்மா ஒன்னு நான் சொல்லலாமா பாடலாகட்டும் புதிய ராகம் படத்தில் இடம்பெற்ற மல்லிகை மாலை கட்டி பாடலும் துன்புற்ற மனதுக்கு மயில்தோகை ஆறுதல் தரும். அதே சமயம் உற்சாகமாக துள்ளிக் குதித்தபடி கேட்பவர் நரம்புகளில் எனர்ஜி ஏற்றும் வித்தையும் அந்தக் குரலுக்கு உண்டு. ஸ்டைலிஷாக வெஸ்டர்னில் மிரட்டிய அக்னி நட்சத்திரம் பட ராஜா ராஜாதி ராஜன் என்றும் ராஜாவும் சரி, கூத்து மேடையில் நின்றுகொண்டு பாடி ஊர் சனங்களின் தலையாட்ட வைத்த கிழக்கு வாசல் பட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் பாடலும் சரி இரண்டுமே ராஜாவின் வெவ்வேறு உற்சாக அருவி வெளிப்பாடு. ஆண் பாவம் படத்தில் வந்த காதல் கசக்குதய்யா பாடல் தலைமுறை தாண்டிய எனர்ஜி பூஸ்டர். ராத்திரி நேரத்து போதை ஊட்டும் நாயகன் படத்தின் நிலா அது வானத்து மேலே பாட்டும் டைப் பண்ணும்போதே ஆடத் தோன்றுகிறதே… இதே வரிசையில் வரும் சிவா வின் வெள்ளிக்கிழம தல முழுகி பாட்டின் செம உற்சாகமும்.

டைட்டில் பாடல் நான் பாடினால் ராசி என்கிறார்கள் என கரகாட்டக்காரன் டைட்டில் பாடலான பாட்டாலே புத்தி சொன்னார் பாடலில் பாடியிருப்பார். அது நிஜம்தான் என்னும்படி பல பாடல்கள். பல டைட்டில்கள். தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே என நாயகனின் ஆறுதலுக்கு வந்த குரலாகட்டும் அதேபோல் ஆவாரம் பூ படத்தின் ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே டைட்டில் பாடல் ஆறுதலாகட்டும் இரண்டுமே வெவ்வேறு தளம் வெவ்வேறு வலி. ஆனால் ஆறுதல் குரல் ஒன்று. அது இளையராஜா. காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே என்று மலையூர் மம்பட்டியான் டைட்டில் பாடல் சொன்னது அந்தப் பெண்ணுக்கு மட்டுமில்லையே. பணக்காரன் படத்து மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாடலின் குரல் இன்னும் எத்தனை பேருக்கு எத்தனை விதமான உத்வேகம் தருகிறது. ஆனால் உயிரை அறுத்து எரியும் பாடலும் உண்டு. என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படத்தில் கண்ணே நவமணியே பாடல் நிறைய சரணங்கள் கொண்டது. ஒவ்வொரு சரணத்திலும் இளையராஜாவின் குரல் குறிப்பிட்ட சதவிகித வேதனை கூட்டும்.

ஒரு சினிமாவின் நெருக்கடியான சூழலில் இடம்பெறும் இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல் அந்தக் காட்சிக்கும் சினிமாவுக்கும் வேறொரு வடிவம் தரும் வித்தையும் நிகழ்ந்திருக்கிறது. அந்தக் குரல் சோகமாகவும் நையாண்டியாகவும் சந்தோசமாகவும் விதம் விதமாக வடிவம் எடுத்திருக்கிறது. மந்திரப் புன்னகை படத்தில் வரும் காலிப் பெருங்காய டப்பா பாடல் படத்தின் இறுக்கமான சூழலை சற்றே லகுவாக்கும் மேஜிக் செய்யும். உன்னைச் சொல்லி குற்றமில்லை படத்தில் வரும் கெட்டும் பட்டணம் போய் சேரென்று பாடலும் சின்ன ஜமீன் படத்து நான் யாரு எனக்கேதும் தெரியல பாடலும் பூமணி படத்து என் பாட்டு என் பாட்டு பாடலும் கிழக்கும் மேற்கும் படத்தில் வரும் உன்னோட உலகம் வேறு என்னோட உலகம் வேறு பாடலும் சின்னக் கவுண்டர் படத்தின் அந்த வானத்த போல பாடலும் கதை சொல்லி கூடுதல் வலி கூட்டும் பாடல்கள். படத்தின் முடிவில் வந்து அதே வலியுடன் கனத்துடன் தியேட்டரை விட்டு வெளிவரச்செய்த சேது படத்தின் வார்த்தை தவறிவிட்டாய் இப்போது கேட்கும்போதும் நெஞ்சடைக்கிறது. அதே படத்தின் எங்கே செல்லும் இந்தப் பாதை சாதாரண மனநிலையில் கேட்க முடிகிற பாடல் அல்ல.

இன்னும் இன்னுமாய் மெட்டி ஒலி காற்றோடு, நாரினில் பூ தொடுத்து, காற்று வெளியில், பாடித் திரிந்த எந்தன் தோழி, கண்மணிக்கு வாழ்த்துப் பாடும், அழகே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே என எக்கச்சக்கமாய் சந்தோஷம், ஆறுதல், வாழ்வு, காதல், மரணம் இசைராஜனின் பாடல்கள் வழியே.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *