PS2- யாத்திசை என்ன பிரச்சனை?- கணேசகுமாரன்

பல கோடி செலவு செய்து வெளியான பொன்னியின் செல்வன் பாகம் இரண்டும் பெரிதாய் செலவோ விளம்பரமோ இல்லாமல் வெளிவந்த யாத்திசையும் முழு வெற்றி அடைந்ததா… ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இரண்டு படங்களும் சரியானபடி பார்வையாளர்களால் பேசப்படாததற்குக் காரணம் என்ன?

பொன்னியின் செல்வன் 2- முதல் பாகம் பார்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்தில் வந்தவர்களுக்கு நாவல் படித்திருந்தால்தான் மீதி புரியும் என்பதுபோல் அமைந்த காட்சிகள் ஒரு பலவீனம். வெப் சீரிஸ் போல் இரண்டாம் பாக ஆரம்பம் படம் பார்க்கச் சென்றவர்களுக்கு ஆச்சரியத்துக்கு பதில் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். கடலில் மூழ்கிய பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆனது என்ற கேள்வியில் இருந்தவர்களுக்கு நின்று நிதானித்து கதை சொன்ன முறை பிடிக்காமல் போயிருக்கலாம். முதல் பாக மிச்சம்தான் என்று தெரியும் அதில் என்ன புதுமை என்பது மக்களின் கேள்வி. 500 கோடி செலவு செய்தவர்கள் இரண்டாம் பாக ப்ரொமோசன் குறித்து பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை என்பது கண்கூடு. வெளியான போஸ்டர்கள் கூட முதல் பாகத்தின்போது வெளியானது போலவே இருந்தது மக்களை திரையரங்கு பக்கம் இழுக்காமல் இருந்திருக்கலாம். மூலக்கதையை சிதைத்து விட்டார்கள் என வெளியில் பரவிய செய்தியும் ஒரு காரணம். கரிகாலன் – நந்தினி காட்சிகளுக்குத் தந்த முக்கியத்துவம் ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோவிலுக்கும் தந்திருக்கலாம். அவசர அவசரமாய் ஓடிடி தளத்துக்குத் தந்து காசு பார்த்திருந்தாலும் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பின் விளைச்சல் குறைவுதான்.

யாத்திசை – குறைந்த பட்ஜெட்டில் நல்ல முயற்சி என்றாலும் படத்துக்கான கள ஆய்வு பெரிதென்றாலும் பார்வையாளர்கள் யார் என்பதை இயக்குநர் தீர்மானித்த விதம் இப்படத்தினை மக்கள் பெரிதும் நெருங்காமல் போனதற்கு ஒரு காரணம். பாதி படம் எய்னர்களின் புரியாத பாஷையில் போகிறது. அதுதான் உண்மையான தூய தமிழ் என்றாலும் ஒரு தமிழ் படத்தில் பேசும் தமிழுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டுப் பார்ப்பதெல்லாம் கொடுமைதான். ஆடு மாடு மனிதன் என வரிசையாய் தெய்வத்துக்கு பலியிடும் இடத்தில் மட்டும் ஒலித்திருக்க வேண்டிய தமிழ் அது. அந்த இடத்தில் மட்டும் அந்தத் தமிழ் ஒலித்திருந்தால் தனியாய் அக்காட்சி பெரிதும் கவனிக்கப்பட்டிருக்கும். இரு குழுக்களுக்கிடையே திறந்த வெளியில் நடக்கும் ரத்த வெறி சண்டைக் காட்சிகளில் அபோகலிப்டஸ் வாசனை. ரணதீரன், கொதி என்ற தனி மனித எதிர்ப்பு போல காட்டியதும் படம் தேவையான வெற்றி கிட்டாமல் போனதற்கு இன்னொரு காரணம். சேர சோழன், சோழன் பாண்டியன் என்றே பார்த்திருந்த மக்களுக்கு படத்தில் காட்டப்படும் எய்னர்கள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ஆதிவாசிகளுக்கும் பழங்குடியினருக்கும் வேற்றுமை புரியாமல் படமாக்கப்பட்டதும் இன்னொரு பிரச்சனை. பெரிதாய் ப்ரொமோஷன் இல்லையென்றாலும் விருதுகளை முன்னெடுத்த சினிமா போலவே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. கொதியின் வீழ்ச்சிக்கும் ரணதீரனின் வெற்றிக்கும் மகிழ முடியாத முடிவு. ஆனாலும் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *