நல்ல நல்ல மனம் பார்த்து – உடுமலை நாராயண கவி- கணேசகுமாரன்

காலத்தால் அழியாத திரை இசைப் பாடல்கள் தந்த உடுமலை நாராயண கவியின் நினைவு தினம் இன்று. தலைமுறைகள் தாண்டியும் வசீகரம் செய்யும் பாடல்கள் அபூர்வமானவைதாம். சாதனைகளுக்குப் பின்னால் சத்தமின்றி இருக்கும் உழைப்பு எத்துனை வருடமானாலும் பேசப்படும். மக்களுக்கான எளிய வாழ்க்கையை அவர்களின் வரியிலே சொல்லி பாடல் புனைந்தவர் உடுமலை நாராயண கவி. பராசக்தியும் தேவதாஸும் தமிழ்த் திரை உலகின் அழியாத பொக்கிஷமென்றால் அதில் பங்குபெற்ற அனைத்தும் பொக்கிஷப் பதிவுகள்தாம். உலகே மாயம் வாழ்வே மாயம் என்று அந்தக் கால இளைஞர்கள் காதல் தோல்வியுற்று தாடி வளர்த்ததில் உடுமலை நாராயண கவிக்கும் பங்குண்டு. இக்கால தலைமுறைக்கும் காதல் தோல்வியும் தாடியும் உண்டு. இருந்தாலும் விதை உடுமலை போட்டது.

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் என்ற பாடலில் நடுத்தர குடும்பஸ்தனின் மாத சம்பள பிரச்சினைகளை எளியவனின் இடத்திலிருந்து எழுதியிருப்பார். இன்றும் மாறாமல் அது தொடர்வது காலத்தை வென்ற கவிஞனின் கூற்றுதானே. சினிமா பாடல்களிலும் வாழ்வின் தத்துவம், அரசியல் தீவிரம் பதிவு செய்திருப்பார். எதற்கும் ஜிகினா சொற்கள் தேவைப்பட்டிருக்காது. பராசக்தியின் காக்கைப் பாடலிலும் நாட்டுக்குத் தேவையான விஷயத்தை நயம்பட உரைத்திருப்பார். விவசாயி படத்தின் நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் பாடலில் உழைப்பாளியின் வியர்வைத்துளி மணக்கும். அதே படத்தின் இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள பாடலில் இது என்ன பிற்போக்குத்தனமான கருத்து என்று முகம் சுளிக்கும் வேலையில் நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது கொஞ்சம் நாமளும்தான் மாறிகிட்டா அதுல தப்பேது என்று நாயகியின் வார்த்தைகளில் சமாதானம் கூறியிருப்பார்.

இரத்தக் கண்ணீர் படத்தின் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதிக்கு அப்போதே திரையரங்கம் சோகம் அப்பிக்கொண்டது. இப்போது கேட்கும்போது அந்தத் துயரமும் வலியும் காற்றில் கலந்து செவிக்குள் இறங்கும். சரித்திரமாய் சாதனையாய் காலமான உடுமலை நாராயண கவி புகழ் காலம் கடந்தும் பேசப்படும்.