செந்தாழம் பூவில் வந்தாடிய தென்றல்- சரத்பாபு- (அஞ்சலி)- கணேசகுமாரன்

தமிழ் சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் இனிய நண்பர் சரத்பாபு. ரஜினிகாந்தின் ஃபேவரைட் படமான முள்ளும் மலரும் படத்தில் கிட்டத்தட்ட வில்லன் சரத்பாபு. அப்படியே உல்டாவாக்கினால் ஹீரோ சரத்பாபு என்றால் வில்லன் ரஜினி. மகேந்திரன் கதாபாத்திரங்களை அருமையாக உருவாக்கியிருப்பார். அந்தப் படத்தில் உருவான நெருக்கமோ என்னமோ ரஜினி சூப்பர் ஸ்டாராய் ஆனபிறகு வந்த ப்ளாக்பஸ்டர் படங்களில் சரத்பாபுவே ரஜினிக்கு உற்ற தோழன். வேலைக்காரனாகட்டும் முத்துவாகட்டும் அண்ணாமலையாகட்டும் அனைத்துமே இருவரின் நட்பை பறைசாற்றும் திரைப்படங்கள். ஒருபக்கம் ரஜினியுடன் நண்பனாய் மறுபக்கம் கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என்று மனம் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமான சலங்கை ஒலியின் க்ளைமாக்ஸில் எழும் கைத்தட்டலில் சரத்பாபுவுக்கும் பாதி பங்குண்டு.

1951 ம் ஆண்டு பிறந்த சரத்பாபு பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். நிழல் நிஜமாகிறது அவருக்குத் தனி அடையாளம் தந்தது. இயக்குநர் மகேந்திரனுக்கு மிகவும் பிடித்த நடிகர் சரத்பாபு. நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், மெட்டி என வரிசையாய் பல படங்களில் சரத்பாபுவுக்கு வாய்ப்புத் தந்தார். நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நாயகி சுஹாசினியின் அண்ணனாக ஒரு ஜென்டில்மேன் நடிப்பை வழங்கியிருப்பார். கதை திரைக்கதையில் மிக பலவீனமான மெட்டி படத்தை முழுவதும் காண சரத்பாபுவும் அவர் அப்பாவாக நடித்திருக்கும் செந்தாமரையும் ஒரு காரணம். ஜெயலலிதாவின் கடைசி சினிமாவான நதியைத் தேடிவந்த கடல் படத்தின் நாயகன்.

மணி ரத்னத்தின் பகல் நிலவு படத்திலும் ஒரு பாசமான அண்ணனாக வருவார். சரத்பாபுவின் சிரிப்பு மிக அழகானது. கண்ணில் தெரியும் கதைகள், நூல் வேலி, அன்று பெய்த மழையில் என சரத்பாபுவின் தேர்ந்தெடுத்த படங்கள் ரசனைக்குரியவை. குழந்தைச் சிரிப்பின் வெளிப்பாடாய் பின் நாட்களில் ஹீரோ ஹீரோயினுக்கு அழகான அப்பாவாய் வலம் வந்த சரத்பாபு தமிழ் சினிமாவின் சாக்லேட் ஹீரோவாய் என்றும் நிலைத்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *