காற்றின் தலையசைப்புக்கு 47 ஆண்டுகள் – கணேசகுமாரன்

அன்னக்கிளி இசைக்கத் தொடங்கி இன்றுடன் 47 ஆண்டுகள் ஆகின்றன. ஆம் தமிழ்த் திரை உலகின் இசை சகாப்தம் மாஸ்ட்ரோ இளையராஜா தன் முதல் இசைக்கோர்ப்புக்கு கையசைக்கத் தொடங்கி இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இசை ரசிகர்களின் செவிகளைத் தன் வசப்படுத்தியிருக்கும் இசை ராஜனின் பாடல்கள் 47 வருடங்களாக காற்றின் காதுகளை வருடியபடி உள்ளன. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தேடத் துவங்கிய இசைக்குரல் வழி நெடுக காட்டுமல்லியாக இன்றும் மணம் வீசியபடி இருக்கிறது.

இளையராஜாவின் அன்னக்கிளி பாடல்கள் தமிழ்த் திரை இசைக்கு புதிய முகமாக புதிய குரலாக புதிய இசையாக வெளியாகி இசை வெள்ளமெனப் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று நடிகை சுஜாதாவின் முக பாவனையில் திரையில் ஒலிக்கத் தொடங்கிய எஸ். ஜானகியின் குரலுக்கு தமிழக மக்கள் கண் மூடி மெய் மறக்கத் தொடங்கினார்கள். அன்று மயங்கியவர்கள்தான் இன்றும் மீளவில்லை. கிராமிய இசைக்கோர்ப்பில் இவ்வளவு இனிமையும் மென்மையுமா என்று ஆச்சரியப்பட்டவர்கள் அநேகம். ‘மச்சானைப் பாத்தீங்களா மல வாழ தோப்புக்குள்ள’ என்ற குத்துப்பாட்டுக்கு தியேட்டரே கரகோஷத்தில் மிதந்து கொண்டாடி மகிழ்ந்தது.

அன்னக்கிளி படத்தின் இசை ஒலிப்பதிவின்போது மின்சாரம் நின்றுபோனதாகவும் இதுபோன்ற சகுனங்கள் எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து ஒலிப்பதிவு நடந்ததாகச் சொல்வார்கள். அது எந்த அளவுக்கு உண்மையோ சில துர் சகுனங்கள் மிகப்பெரும் வரலாற்றுக்கு அடிகோலுகின்றன. அதுபோல் படம் வெளியாகி தொடக்கத்தில் வரவேற்பு இல்லாத நிலையில் இளையராஜாவின் இசையில் புதிதாய் ஒரு பாடல் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் உண்டு. அதுபோல் பின்னணி இசையில் தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரை பதித்தவர் இளையராஜா. குறிப்பாக சிவகுமாரின் அம்மா பண்ணையாரிடம் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகச் சொல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் வயலின், வீணை மற்றும் மிருதங்கத்தின் இசைக் கலவையைச் சொல்லலாம்.

மச்சானைப் பாத்தீங்களா, அன்னக்கிளி உன்ன தேடுதே, சுத்த சம்பா நெல்லரிசி குத்தத்தான் வேணும் போன்ற சந்தோசப் பாடல்களிலும் சரி சொந்தமில்லை பந்தமில்லை சோகப்பாட்டாகட்டும் அன்னக்கிளி பாட்டின் சோக வடிவான டி. எம். செளந்திரராஜன் பாடும் பதிவாகட்டும் அனைத்தும் இளையராஜாவின் தனி ராஜாங்க இசைக்கோர்ப்பு. இன்னும் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அன்னக்கிளி பாடல்கள் ரசிகனைத் தேடிக்கொண்டுதான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *