புர்கா – திரை விலகாத மர்மம் – கணேசகுமாரன்

சமீபகாலமாக புர்கா, தி கேரளா ஸ்டோரி, ஃபர்ஹானா என்று இஸ்லாமியர்களை, இஸ்லாம் மத வழக்கத்தை கேள்வி கேட்கும் படங்கள் சர்ச்சைக்குள்ளாகி வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இணையதள திடீர் போராளிகள் மத்தியில் சர்ச்சைக்குள்ளான படமாக சித்தரிக்கப்பட்டு கடும் கண்டனத்துக்குள்ளான புர்கா சினிமா முதலில் சினிமாவாக ஆகியிருக்கிறதா என்பதிலே குழப்பம் உள்ளது. நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத இயக்குநரால் கையாளப்பட்ட கரு லாஜிக் சிதறல்களாலும் கதாபாத்திர குளறுபடியாலும் ஒன்றரை மணி நேர அனுபவத்தை சிதறடிக்கிறது எனலாம்.

இஸ்லாமிய மத வழக்கத்தில் உள்ள இத்தா என அழைக்கப்படும் கணவன் இறந்தபின்பு நான்குமாதம் பத்து நாட்கள் தனிமைச் சிறையில் இருக்கும் காத்திருப்பு கால இளம் விதவைக்கும் அடைக்கலம் நாடி வந்த முரடனுக்கும் இடையில் உண்டாகும் காதலைச் சொல்வதா… பழம்பெருமை பேசிக்கொண்டு பெண்களை புர்கா என்னும் முகமூடி கொண்டு மூடி அடிமையாக்கும் மதக் கட்டுப்பாடுகளை நோக்கி கேள்வி கேட்பதா என்ற குழப்பத்தில் இரண்டையும் சரிவர செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர்.

முன் பின் தெரியாத ஒரு வாலிபனிடம் ஓர் இரவு கலவரமான அறிமுகத்துக்குப் பிறகு அத்தனை இயல்பாய் மறுநாள் பேசமுடியுமா… எல்லாம் பகிர்ந்துகொள்ள முடியுமா… கணவன் இறந்த துக்கம் முகத்தில் பெரிதாய் தென்படாததோடு தினசரி நடவடிக்கையாக தனிமைச் சிறையில் இருந்தாலும் தன்னை அலங்கரித்துக் கொள்வதோடு அதைக் குறித்து சந்தோஷமும் கொள்கிறார் நாயகி. அந்நிய ஆண்களுக்கு முகம் காட்டக் கூடாது என்பதே இத்தாவின் முக்கிய குறிக்கோளாய் இருக்க நாயகனுடன் சேர்ந்து உணவருந்தும் நாயகி புறமுகுதுகு காட்டிக்கொண்டு அமர்வது என்ன புரட்சியோ…

ஒரு காட்சியில் நாயகனின் பார்வையில் படும்படி சற்று தூரமாய் அமர்ந்து குரான் வாசித்துக்கொண்டிருப்பார் நாயகி. நாயகனின் கண்களுக்கு அந்த அரபி எழுத்துகளும் அந்தப் புத்தகத்தில் செருகி வைக்கப்பட்டிருக்கும் பணத்தாள்களும் பளிச்சென்று தெரியும். அது குறித்து கேள்வியும் கேட்பார். ஆனால் குரான் வாசிக்கும் புர்கா போட்டு மூடாத நாயகியின் முகம் மட்டும் நாயகன் கண்ணுக்குத் தெரியாதாம்… இரவில் சிகிச்சை முடிந்து மறுநாள் காலையில் புறப்படும் நாயகனை பகலில் சென்றால் ஊர் தப்பாய் பேசும் என்கிறார் நாயகி. இரவில் போகச் சொல்கிறார் என்று பார்த்தால் இரவு தங்கி மறுநாள் போகச் சொல்கிறார். என்ன லாஜிக்கோ…

ஏகப்பட்ட பொருட்செலவில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் ப்ரொமோ என்ற பெயரில் நிறைய பணத்தை வீணடித்துக்கொண்டிருக்க குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் சினிமாக்களுக்கு இப்படி ஒரு அதிரடி ஸ்டண்ட் அறிவிப்புகள் தேவைப்படுகிறது போலும். யாரும் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தாலே காணாமல் போயிருக்கக் கூடிய ஒரு சினிமாதான். இதற்காக இணையதள போராளிகள் இயக்குநரை கழுமரத்தில் ஏற்றியிருக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *