“நீங்க பயப்படாதீங்க” திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது-உதயநிதி!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல், “திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நீங்க பயப்படாம இருங்க.. உங்களைத்தான் நிறைய பேர் அச்சுறுத்துகிறார்கள்.” என கூலாக பதில் கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கிப் பேசினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்க முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார் எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் வருமான வரித்துறை சோதனை பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “ஐடி ரெய்டுகள் எப்போதும் நடப்பது தான். இதென்ன புதிதா? ஒவ்வொரு வருடமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டு உள்ளதா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? நடவடிக்கை எடுத்துள்ளார்களா? யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர்.போட்டு இருக்கிறார்களா? எதுவும் இல்லையே.. திமுகவை யாரும் வாழ்த்துவதில்லை. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவற்றைத் தகர்த்து எறிந்துவிட்டு எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.திமுகவை மத்திய அரசு அச்சுறுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நீங்க பயப்படாம இருங்க.. உங்களைத்தான் நிறைய பேர் அச்சுறுத்துகிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிளாஸ் எடுப்பது போல் நடத்துகிறார்.ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. அவரிடம் போய் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பாதியில் நிறுத்தி அவமரியாதை செய்ததைப் பற்றி கேளுங்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பற்றி கேட்கிறீர்கள். அவர் பேசியதாகவே பல ஆடியோக்கள் வெளிவந்துள்ளன. அது குறித்து என்ன கேள்வி எழுப்பினீர்கள்?” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *