கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு-முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் குடியரசுத்தலைவர்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க வரும் ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகை தர உள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி பன்னோக்கு கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டது.

இதன்படி, நேற்று இரவு விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். ஆனால் அவர் டெல்லி செல்ல இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தாமதம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டதால் விமான நிலையத்தின் விஐபி அறையில் முதல்வர் ஸ்டாலின் காத்திருந்தார். ஆனால் இரவு 9.30 மணி ஆன பிறகும் தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்படவிலை. இதனால், கூடுதல் நேரம் ஆகும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து தனது நேற்று புறப்படுவதாக இருந்த தனது பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்று அடைந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் சந்தித்து பேசினார்.அப்போது, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் விடுத்த இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, ஜுன் 5 ஆம் தேதி தமிழகம் வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி, வரும் ஜூன் 5 ஆம் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத்தலைவர் திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *