ஒரு மாதத்தில் கம்பி எண்ண வைப்பேன்! கொதித்த துரைமுருகன்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தன்னுடைய பெயரைச் சொல்லி பலர் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும் யாரையும் தாம் சும்மா விடப்போவதில்லை எனவும் கொதிப்புடன் பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.தன்னுடைய பெயரைச் சொல்லி தனது தயவில் வந்த சர்க்கரை ஆலையை வைத்து கொள்ளையடிப்பவர்கள் இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ கம்பி எண்ணுவார்கள் என எச்சரித்துள்ளார்.யார் யார் தவறு செய்கிறார்கள் என்ற லிஸ்டை ரெடி செய்து ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன் என பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த சீற்றத்தை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தொகுதியில் தன்னை சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முதியோர் உதவித் தொகை வரவில்லை என்ற புகாரை கூறுவதாக தெரிவித்தார்.புரோக்கர்கள் ரொம்ப பேர் பத்தாயிரம் கொடு, பதினைந்து ஆயிரம் கொடு முதியோர் உதவித் தொகை வாங்கித் தருகிறேன் என ஏமாற்றும் தகவலும் தனக்கு கிடைத்திருப்பதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், அது போல் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருகிறேன் பணம் கொடுங்கள் என எந்த புரோக்கராவது கேட்டால் நேராக தன்னிடம் உரியவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அரசின் பெயரை கெடுக்கும் நபர்களை கைது செய்ய வைப்பேன் எனவும் கூறினார்.மேலும், முதியோர் உதவித் தொகை விவகாரத்தை கவனிக்கும் சிறப்பு தாசில்தாரிடம் இது குறித்து கறாரான முறையில் சில அறிவுறுத்தல்களை தாம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.இதனிடையே தன்னுடைய பெயரைச் சொல்லி பலர் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது வேலூர் மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துரைமுருகன் யாரை மனதில் வைத்து இதை கூறியிருப்பார் என வேலூர் மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் பட்டிமன்றமே நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *