மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு மரகத நாணயம்…இறந்தவர் உயிரோடு வந்ததால் சர்ச்சை…

வெங்கட்ராம்.

மரகத நாணயம் படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் இறந்தவர் ஒருவர் காலையில் வந்து கதவை தட்டி தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்புவார். அந்த படத்திலாவது அவர் மறுநாளே வந்து எழுப்புவார் ஆனால் உண்மையில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் இரண்டு வருடம் கழித்து வந்து எழுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் படிதார் (35). கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, வதோதராவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.அதனால் வருந்திய குடும்பத்தினர், அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு, மருத்துவமனையில் உடலை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மரணித்துவிட்டதாகக் கருதப்பட்ட கமலேஷ் படிதார், கடந்த சனிக்கிழமை காலை ஆறு மணியளவில் கரோட்கலா கிராமத்திலுள்ள அவரின் தாய்வழி அத்தையின் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறார்.

கதவைத் திறந்த அவரின் அத்தை ஆச்சரியம் கலந்த அச்சத்தில் உறைந்திருக்கிறார். இது தொடர்பான தகவல் ஊர் முழுவதும் பரவியதும், சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகள் வந்து அவரிடம் விசாரித்திருக்கின்றனர். ஆனால், அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன நடந்தது… எங்கே இருந்தார் என எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “கொரோனா தொற்றால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட கமலேஷ் படிதார் மீண்டும் உயிரோடு வந்திருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வீடு திரும்பிய பிறகே கமலேஷ் உயிரோடிருப்பது அவரின் குடும்பத்தாருக்குத் தெரியவந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கே… என்ன செய்துகொண்டிருந்தார்… என அவர் வாக்குமூலம் அளித்த பிறகே தெளிவாகத் தெரியவரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *