ஆளுநருக்குச் சவால் விட்ட உதயநிதி.. ஆதரவு தந்த ரஞ்சித்..களத்தில் குதித்த அமைச்சர்கள்..!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

மீண்டும் திமுக Vs ஆளுநர் யுத்தம் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. ‘சட்டம் இயற்றுவதில் சட்டப்பேரவை ஒரு அங்கம் மட்டுமே’ என்று ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணிக்குத் தயாராகும் மாணவர்களிடையே நடந்த ‘எண்ணத் துணிக’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, “சட்டம் இயற்றுவதில் சட்டப்பேரவை ஒரு அங்கம் மட்டுமே, மசோதாவைச் சட்டமாக்குவது ஆளுநரின் பணிபேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்படும் மசோதாவை நிறுத்தி வைத்தாலே, அது நிராகரிக்கப்பட்டது என்பதே அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காகவே சிலர் ‘நிறுத்திவைப்பு’ என்று கூறுகிறார்கள். அரசியல் சாசனத்தின்படி மசோதா நிறுத்திவைப்பு என்றால், அது நிராகரிக்கப்பட்டது என்றே அர்த்தம்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர், வெளிநாட்டு அமைப்புகள் பணம் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். அந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.ஆளுநர் பேச்சுக்கு எதிராக வரும் 12 ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளதாக திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.ஆர்.என்.ரவியின் சர்ச்சைப் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையின் உள்ளே உட்கார்ந்து கொண்டு இதைப் பேசுகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசுகின்ற ஆளுநருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன்.

முடிந்தால் அவர் இதே கருத்தை தூத்துக்குடிக்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் இதைத் தைரியமாகப் பேச முடியுமா? அல்லது சென்னையில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேச முடியுமா? அப்படிப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு, “உரியப் பதிலை முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றே கூறி இருக்கிறார். நான் கடந்த 50 ஆண்டுக்காலமாக அரசியலிலே இருக்கிறேன். குறிப்பாக 1984இல் இருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் சரி, எம்.ஜி.ஆர் ,முதல்வராக இரிந்தபோதும் சரி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு முதலமைச்சர்கள் தற்காலிகமாகப் பதவி வகித்துவிட்டுப் போனார்களே அப்போதும் சரி தொடர்ந்து திமுக ஆளும் கட்சி இருந்தபோது அமைச்சராகவும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்ற உறுப்பினராகவும் மாறிமாறி தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

ஆகவே, இதைச் சொல்கிறேன். ஆளுநர் என்பவர் அரசுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கவேண்டும். திட்டங்களை ஊக்கப்படுத்துபவராக இருக்கவேண்டும். அரசின் கொண்டுவரும் திட்டங்களை விரைந்து செயல்படுவதற்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும். எனது இத்தனை கால அரசியல் அனுபவத்தில் பல ஆளுநர்களை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற ஒரு ஆளுநரை நான் பார்த்ததே இல்லை. அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகின்ற ஆளுநராக ஆர்.என். ரவி இருக்கிறார். உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதற்கு ஒரு துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என ஆளுநரிடம் முறையிட்டால், அதைக் கிடப்பில் போடுகிறார். துணைவேந்தர் உரியக் காலகட்டத்திற்குள் நியமிக்கவில்லை என்றால், அதை நம்பி உள்ள கல்லூரிகளின் பணிகள் பாதிக்கும். அதை அரசு சுட்டிக்காட்டினால் ஆளுநர் ஏற்பதில்லை. அதேபோல்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனிற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் அதைக் கிடப்பில் போடுகிறார். அனுமதி தர மறுக்கிறார். அப்படி என்றால் அரசு எப்படி இயங்கும். ஆகவே ஆளுநரின் முட்டுக்கட்டைக்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் உள்ளது. அது என்ன உள்நோக்கம் என்று என்னைக் கேட்காதீர்கள். அதைப் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் அவரிடம் கேட்கவேண்டும். இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் மிக விரைவாகச் செயல்படுகிறார். அவரது வேகத்திற்கு இணையாக ஆளுநரும் விரைந்து செயல்படவேண்டும். அப்படி அவர் விரைந்து செயல்பட்டால், மக்களுக்குப் பல திட்டங்கள் மிக விரைவாகப் போய்ச் சேரும். அதுவே என் கருத்து” என்கிறார்

அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.பி. முனுசாமி, “உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஒருவர், இப்படி பொதுவெளியில் இதைப்போன்ற கருத்துகளைச் சொல்வது அவருக்கே அழகில்லை என்றுதான் சொல்வேன். ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்று செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்ட, முடிந்துபோன ஸ்டெர்லைட் ஆலை போராட்ட நிகழ்வு பற்றி ஆளுநர் கருத்துச் சொல்வது சற்று வேதனை அளிப்பதாக உள்ளது.” என்கிறார்.மேலும் அவர் ஆளுநர் குறிப்பிட்டுப் பேசிய ஸ்டெர்லை விவகாரத்தில் அந்நியநாட்டின் சதி இருந்ததாகச் சொன்ன கருத்து பற்றி, ” நாட்டின் பிரதமராக மோடிதான் இருக்கிறார். அவர் நாட்டு நலன் பற்றிய விவகாரங்களைப் பல வழிகளில் கண்காணித்துச் செயல்பட்டு வருகிறார். ஆகவே அவர், அப்படி அந்நியநாட்டுப் பணம் உள்ளே வருவதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார். அப்படிச் செய்பவர்களை மோடி நிச்சயம் சிறையில் அடைப்பார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *