அன்பு தம்பி வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்…விடுதலை படம் பார்த்த சீமான்.

வெங்கட்ராம்.

ஒடுக்கப்படும் ஒவ்வொரு தேசிய இனத்தின் பெருங்கனவே விடுதலை. என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை திரைப்படம் கண்டேன். முழுவதும் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு திரைக்கதை இது எனக் கடந்துவிட முடியாதபடிப் பன்னெடுங்காலமாகத் தமிழ்த்தேசிய இனம் தூக்கிச் சுமக்கிற கனத்த உணர்வே ‘விடுதலை’ திரைப்படமாக உருவாகியிருப்பதாக உணர்கிறேன்.

இந்தத் தலைமுறையின் தலைசிறந்த படைப்பாளி தான் என்பதை விடுதலையின் வழியே இன்னொரு முறை நிறுவியிருக்கிறார் அன்புத் தம்பி இயக்குநர் வெற்றிமாறன். வெற்றியின் இயக்கத்தில் ஒட்டுமொத்த திரைப்படக் குழுவினரும் அர்ப்பணிப்போடு தங்களின் கூட்டுழைப்பைச் செலுத்தி தத்தமது பங்களிப்பை நிறைவாகச் செய்திருப்பதால் காட்சிக்கு காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது விடுதலை. தொடங்கியது முதல் இடைவெட்டு இன்றி எட்டு நிமிடங்களுக்கு ஒரே பதிவாகச் செல்லும் படத்தின் முதல் காட்சியே படக்குழுவினரின் கூட்டுழைப்பிற்கும், செய்நேர்த்திக்குமான சான்று. திரைப்படத்தின் தொடக்கக் காட்சியான அது, ‘ஓர் உலகத்தரமான திரைப்படத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்’ என்ற மனநிலைக்கு நம்மை அணியமாக்கி விடுகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *