ராகுலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த உத்வேகம்!நெகிழ்ச்சியில் காங்கிரஸ்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்த நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அவரது அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்திக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ஆறுதலோடு, ஆதரவு தெரிவித்து உத்வேகம் கொடுத்துள்ளதை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருடர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் மோடி என முடிகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியது தான் பிரச்சனைக்கு காரணமானது.

மேலும் ராகுல் காந்தி பிரதமர் மோடியையும் அவமானப்படுத்தியதாக பாஜகவினர் கூறினர். இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடர்ந்தார்.இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாள் ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை அதிரடியாக பறித்தது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடம் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராகுல் காந்தி டெல்லியில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் எம்பியாக உள்ள ராகுல் காந்தி டெல்லியில் துக்ளக் சாலை பகுதியில் அமைந்த அரசு பங்களாவில் வசித்து வந்தார். எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கப்பட்டதால் பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.மேலும் மக்களவை வீட்டு வசதி குழு நோட்டீசும் அனுப்பியது.இந்நிலையில் ராகுல் காந்தி மக்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதினார். அதில் எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்காக தங்களுக்கு நன்றி. பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எனது மகிழ்ச்சியான தருணங்களை இதில் செலவிட்டேன்.

எனது உரிமைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் தங்களது கடிதத்தில் அடங்கிய விவரங்களின்படி நிச்சயம் நடப்பேன்” என கூறியிருந்தார். இதன்மூலம் ராகுல் காந்தி அரசு பங்களாவை காலி செய்வது உறுதியாகி உள்ளது.இந்நிலையில் தான் ராகுல் காந்தி லோக்சபா செயலகத்தின் துணை செயலாளர் மோகித் ராஜனுக்கு எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாவது: அன்புள்ள ராகுல் காந்தியே.. இந்த நாட்டை கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் இல்லமும் உங்கள் வீடு தான்.. இந்தியாவே உங்கள் வீடு தான்.. உங்களுக்கான ஆற்றல் அதிகம்.. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *