துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் மரணம்!
துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் ட்ரைலர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்த போது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் நடித்துள்ள திரைப்படம் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் முழுவதும் பட்டாசு வெடிப்பது, வானவேடிக்கை, தாரை தட்டை வாத்தியம், இசைக் கச்சேரி என தூள்கிளப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்த போது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.