வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை கூறிய தளபதி விஜய்

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், VTV கணேஷ், சதீஷ், ஸ்ரீமன், இயக்குநர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் தளபதி விஜய் பேசுகையில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் வணக்கம். நாம் போகும் பயணம் நிறைவாக இருக்க வேண்டுமென்றால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியானதாக இருக்க வேண்டும். நன்றி தெரிவிக்கும் மேடையாக இந்த மேடையை பயன்படுத்திக் கொண்டு என்னை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார் விஜய்.

ரஞ்சிதமே பாடல் பாணியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தார். இதே பாணியில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை இரண்டு முறை சந்தித்தபோது இதே பாணியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தார்.

எல்லோருக்கும் முத்தம் கொடுப்பதற்கு ஒரு ஸ்டைல் மாட்டிக் கொண்டது. இனிமேல் இதுதான். படக்குழு அனைவருக்கும் விழா மேடையில் நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய்.

இந்த படத்தினுடைய அடித்தளமான பாடலாக ‘Soul Of Varisu’ பாடல் உள்ளது. அந்தப் பாடலுக்காக சிறப்பு பாராட்டு. வாரிசு வீட்டில் சரத்குமாரின் நாட்டாமை தான். 

வில்லன் என்றால் நமக்கு நிறைய பேர் நினைவுக்கு வருவார்கள். ஆனால் செல்லம் என்று கூறினால் பிரகாஷ்ராஜ் பெயர் தான் மனதுக்கு வரும். அதுதான் நம்ம முத்துப்பாண்டி. வாரிசு படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். இது ஒரு நெருங்கிய உறவுகளைப் பற்றி கூறும் படமாக அமைந்துள்ளது

உறவுகளைப் பற்றி ஒரு குட்டி கதை கூறுகிறேன். அம்மா, அப்பா, அண்ணன் தங்கை என ஒரு குடும்பம் உள்ளது. அப்பா தினமும் வேலைக்கு சென்று வரும்போது இரண்டு சாக்லேட் வாங்கி வந்து அண்ணனுக்கு ஒன்றும் தங்கைக்ககு ஒன்றுமாக வழங்குகிறார். அந்த தங்கை பாப்பா சாக்லேட்டை உடனே சாப்பிட்டு விடுகிறது. 

அண்ணனுக்கு கொடுக்கப்பட்ட சாக்லேட் அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம் என்று ஒரு இடத்தில் மறைத்து வைப்பார். அண்ணன் வேறு பக்கம் நகர்ந்ததும் தங்கச்சி பாப்பா மறைத்து வைத்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடும். இது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

ஒரு நாள் அந்த தங்கை அண்ணனை பார்த்து கேட்கிறது. அன்பு என்று சொல்கிறார்களே அது என்ன என்று? நீ உன்னுடைய சாக்லேட்டையும் சாப்பிட்டு விடுகிறாய் நான் மறைத்து வைத்த சாக்லேட்டையும் சாப்பிட்டு விடுகிறாய். ஆனால் நீ எடுத்து சாப்பிட்டு விடுவாய் என தெரிந்தும் தினமும் அதே இடத்தில் சாக்லேட்டை பரத்தி வைக்கிறேன் அல்லவா? அதுதான் உண்மையான அன்பு என்று அண்ணன் கூறுகிறார்.

அதனால் அன்பு தான் உலகத்தையே ஜெயிக்க கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக் கொடுக்கிற நம் உறவுகள், எதுக்காகவும் நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு அன்பு இருந்து விட்டாலே போதும்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ரத்ததானம் செய்து வருகிறது. இதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பேச வேண்டும் என நினைத்து வந்தேன். 

இந்த ரத்தத்திற்கு மட்டும் தான் ஏழை, பணக்காரன் வித்தியாசம்,  உயர்ந்த ஜாதியா தாழ்ந்த ஜாதியா என்ற வித்தியாசம் பார்த்ததில்லை. மிகவும் முக்கியம், எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று பார்ப்பதில்லை. ரத்த வகை பொருந்தினாலே போதும். ரத்ததானம் செய்ய வருபவர்களிடம் என்ன ஜாதி, என்ன மதம், பிறந்த நேரம் என கேட்டு தானம் செய்வதில்லை.

நாம்தான் அப்படியே பிரித்துப் பார்த்து வாழ்ந்து பழகி விட்டோம். ரத்தத்துக்கு அதெல்லாம் கிடையவே கிடையாது. இந்த ஒரு நல்ல எண்ணத்தையாவது ரத்தத்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் காரணமாகத்தான் விஜய் மக்கள் இயக்கத்தில் ரத்த தானமும் கண் தானமும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து நன்றிகளும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளே சேரும்.

என்னுடைய ஆசையையும் விருப்பத்தையும் அவ்வப்போது சொல்வது உண்டு. ஆனால் குருதியகமோ, விழியகமோ, விலையில்லா விருந்தகமோ என நான் சொல்வதை அவர்கள் தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். அவர்களுக்குத்தான் இந்த நன்றி அனைத்தும் போய் சேரும். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் என்பதுதான் போதை. இந்த முப்பது வருட பயணத்தில் எத்தனையோ போராட்டம் சவால்கள் பிரச்சனைகள் என அனைத்தையும் சந்தித்து விட்டு, இந்தப் புன்னகையுடன் எப்படி கடந்து செல்கிறீர்கள் என தொகுப்பாளர் ரம்யா கேட்டபோது, பழகிவிட்டது என விஜய் பதில் கூறினார்

ஒன்று பழகிவிட்டது. இரண்டாவது பிரச்சனைகள் வருகிறது, எதிர்க்கிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என அர்த்தம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் வெற்றிப் பாதைக்கு நம்மை ஓட வைக்கும்.

1990-களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவாகினார். முதலில் ஒரு போட்டியாளராக இருந்து போகப் போக சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேலேயும் அவர் வெற்றி மேலேயும் உள்ள பயத்தினால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் சென்ற இடத்துக்கு எல்லாம் அவரும் வந்தார். நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு காரணமாக இருந்தார். அவரைத் தாண்ட வேண்டும் என்ற முயற்சியில் நானும் போட்டி போட்டுக் கொண்டே இருந்தேன். அந்த மாதிரி போட்டியால் உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும். அந்தப் போட்டியாளர் உருவான வருடம் 1992. அந்தப் போட்டியாளரின் பெயர் ஜோசப் விஜய்.

ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் அனைவரிடமும் ஒரு போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் அவர்களாகவே தான் இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்கள்தான் எதிரி, போட்டியாளர். அடுத்தவரை அவ்வாறு பார்க்க வேண்டும் என அவசியம் இல்லை.

பின் விழா மேடையில் நடிகர் விஜய் தன் ரசிகர்களோடு செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடும்படி, அட்மின் ஜெகதீஷிடம் கூறினார். மேலும் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துமாறும் தெரிவித்தார். இந்நிலையில் அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விழா மேடையில் ரஞ்சிதமே பாடலை பாடி ரசிகர்களை விஜய் உற்சாகப்படுத்தினார். பாடகர்கள் மானசி சிலம்பரசன் அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கிறிஸ்துமஸ் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து கூறி விழா மேடையில் இருந்து விஜய் விடை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *