3 மணி நேரத்தில் மொத்த படத்தின் டப்பிங்கை முடித்த நடிகர்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படமான ‘நாய் சேகர்’, ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநரான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய இயக்குநர், “ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் மையக்கரு. தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நாய் சேகர் அமைந்துள்ளது,” என்றார்.

இதுவரை நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி இந்த படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சதீஷின் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய் கேரக்டருக்கு மிர்ச்சி சிவா டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த டப்பிங்கையும் 3 மணி நேரத்தில் அவர் முடித்து கொடுத்துள்ளார். 

500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள சங்கர் கணேஷ் இப்படத்தின் எதிர் நாயகனாக நடித்துள்ளார். ஜார்ஜ் மரியன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம் மற்றும் ‘கலக்கப் போவது யாரு’ பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும். இயக்குநர் கிஷோர் ராஜ்குமாரும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். எம் ஜி முருகன் இப்படத்தின் கலை இயக்குநர் ஆவார். பாடல்களை சிவகார்த்திகேயன், விவேக் மற்றும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் பாடல்களுக்கு அஜீஷும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு அனிருத் ரவிச்சந்தரும் இசையமைத்துள்ளனர். நடனத்தை சாண்டியும் சண்டைக்காட்சிகளை மிராக்கல் மைக்கேலும் வடிவமைத்துள்ளனர். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் எஸ் எம் வெங்கட் மாணிக்கம், கிரயேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி. 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்துள்ள, கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கிய ‘நாய் சேகர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *