தாதா சாகேப் பால்கே விருது : இவர்களுக்கு எல்லாம் எப்போ தரப்போறீங்க .. ஒன்றிய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை

தாதா சாகேப் பால்கே விருதினை வென்ற ரஜினிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள கவிஞரும் , பாடலாசிரியருமான வைரமுத்து ” கமல்ஹாசன் , பாரதிராஜா , இளையராஜா போன்ற விருதிற்கு தகுதிமிக்க பெருங்கலைஞர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் “ என குறிப்பிட்டு டிவிட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்
கடந்த 2019ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச்சில் அறிவிக்கப்பட்டன. அப்போது, இந்திய திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு முன்னர் இந்த விருதினை சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் விருது வழங்கும் விழா கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் நடைப்பெற்றது .நடிகர் ரஜினிகாந்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, அதற்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.விருதினை பெற்ற ரஜினிகாந்த் ” என் குருவும் , எனது வழிகாட்டியுமான பாலசந்தர் அவர்களுக்கு இவ்விருதினை சமர்ப்பிக்கிறேன் “ என விருது விழாவில் பேசினார் .தாதா சாகேப் விருதினை வென்றதற்கு அரசியல் தலைவர்கள் , தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .
அந்த வகையில் , 6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலக பாடலாசிரியரும் , கவிஞருமான வைரமுத்து தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் . பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த் , ஊர் கூடி வாழ்த்துவோம் என குறிப்பிட்டு உள்ளவர் தொடர்ந்து கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம் என பதிவிட்டுள்ளார் .