ஆஸ்கர் போட்டியில் கூழாங்கல்… மகிழ்ச்சியின் உச்சத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் தான் நடித்த அல்லது விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களை மட்டுமே தயாரித்து வந்த நயன், சமீப காலமாக நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் ஆரம்பித்துள்ளனர். அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான ‘கூழாங்கல்’ படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து நெதர்லாந்து நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், ‘டைகர்’ விருதையும், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியும் உலக அளவில் கவனம் ஈர்த்தது. தற்போது நயன் – விக்கி ஜோடிக்கு உச்சகட்ட மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கான படங்களின் பட்டியல் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022 மார்ச் 27ல் நடைபெற உள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் தேர்வாகியிருந்த நிலையில், தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படமும் தேர்வாகியுள்ளது. இதையடுத்து விக்கி – நயன் ஜோடிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.