ஒல்லி நடிகராக இருந்து கில்லி நடிகராக மாறிய தனுஷுக்கு பிறந்தநாள்!

நடிகர் தனுஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார், இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள வித்தியாசமான காமன் டிபி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளை மட்டும் சந்தித்து ஒல்லி நடிகராய் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கில்லி நடிகராக திகழ்கிறார். மேலும் இவர் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார்.
இவர் தேர்ந்தெடுக்கும் கதையும், வித்தியாசமான தனது நடிப்பின் மூலம் புகழின் உச்சத்தை தோட்ட தனுஷ், இவரது நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல் ‘கர்ணன்’ படத்திற்கும் தேசிய விருது தனுஷுக்கு கிடைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்க படுகிறது.
நடிப்பை தாண்டி, பின்னணி பாடகர், பாடல் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வெற்றியும் கண்டுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், கிரேக்க மன்னர் போல் வித்தியாசமான தோற்றத்தில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள காமன் டிபி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் தனுஷ் கழுத்தில் ருத்ராச்சம் அணிந்துள்ளது போன்றும், அவருக்கு சிறகுகள் உள்ளது போன்றும் உள்ளது. மேலும் அவர் பெற்றுள்ள விருதுகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகராக அனைத்து எல்லைகளையும் கடந்து சாதித்தவர். ஒரு கலைஞராக தான் கையிலெடுத்த அனைத்து கலைகளிலும் வெற்றிகளை மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்தவர் தனுஷ். பல வகைகளில் வெகுஜன சினிமாவில் மிகவும் அரிதான சாதனையாளரான தனுஷ் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் மென்மேலும் பல உயரங்களை அடையவும் அவருடைய இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.
மேலும் தனுஷ் அவர்களுக்கு சினிமாதுறை பிரபலங்கள், ரசிகர்கள் என பல தரப்பிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் பாராதிராஜா நடிகர் தனுஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.”விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்றப் பணிவால் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் தனுஷ்” என்று வாழ்த்தியுள்ளார்.