ஒரே நாடு என்ற எண்ணத்தில் பாஜக இவ்வாறு செயல்படுகிறது… குற்றம்சாட்டும் தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன் பெயரில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையரிடம் புகாரளித்த பின்பு தங்கர் பச்சான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரைப்படத்துறையிலும் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக என் புகைப்படத்தைப் பயன்படுத்தி நான் வெளியிடாத கருத்துகளை வெளியிட்டுச் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் கடந்த ஜூலை 13 ,2020 ஆண்டு ஊடங்களிலும் சமூக இணைய தளங்களிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன்.
அண்மையில் ஒளிப்பதிவு திருத்த சட்டமசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது போல் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் லோகவை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு பொய்ச் செய்திகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளேன்.
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா ஆபத்தானது, திரைப்படத் தொழிலையே அழிக்கக்கூடியது. பெரிய நடிகர்கள் அனைவரும் ஓன்றாகச் சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். நடிகர் ரஜினியும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
ஒரே நாடு அமைப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் பாஜக அரசு தொடர்ந்து இதைச் செய்து வருகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையில் இது குறித்து குரல் எழுப்ப வேண்டும்” எனப் பேசினார்.