குரல்வளையை நெறிக்கும் சட்டம்… ஆவேசம் காட்டும் சூர்யா
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு திருத்த மசோதா மாநிலங்கவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது. இப்போது, இந்த நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த திருத்தச் சட்டத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், முக்கியமாக அதில் நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தத்திற்கு பல சினிமா பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உள்ள சட்டப்படி ஒரு முறை தணிக்கை செய்து படம் வெளிவந்து விட்டால் மத்திய அரசு கூட அதில் திருத்தங்கள் செய்ய முடியாது. ஆனால், இந்த திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் முதலில் தணிக்கை செய்து படம் வெளிவந்திருந்தாலும் மீண்டும் மத்திய அரசு தணிக்கை செய்ய பரிந்துரைக்கலாம்.
இதனால், படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரம் பறிக்க போகும் நிலை உள்ளது என நடிகர் கமல்ஹாசன் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.