மாடித்தோட்டத்தில் ஆர்வம் காட்டும் சிவகார்த்திகேயன்
நகரங்களில் கட்டிடங்களுக்கு இடையே தோட்டங்கள் அமைப்பது முடியாத காரியம் என்பதால் பலர் தங்கள் வீட்டு மாடியிலேயே மாடித்தோட்டம் அமைத்து வருகின்றனர்.
இதை பராமரிப்பதும் எளிது என்பதால் தற்போது பலர் இதில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குஷ்பூ, மாதவன், சுஹாசினி ஆகிய திரைப்பிரபலங்களும் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்துள்ளனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் புதிய வீட்டு மொட்டைமாடியில் இந்த மாடித்தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார். மேலும், தனது வீட்டு மாடித்தோட்டத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
நம்ம வீட்டுத் தோட்டம் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இது தான் நம்ம மாடித்தோட்டம். ஊரடங்கிற்குச் சிறிது காலம் முன்பு தான் பணிகள் தொடங்கியது. தற்போது இதிலிருந்து வரும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளைத் தான் உண்கிறோம்.
தோட்டத்தை இன்னும் முழுமையாக்க வேண்டும். முடித்தவுடன் மீண்டும் காட்டுகிறேன். சீக்கிரம் இந்த பசுமை அனைவரின் வாழ்விலும் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.