17 மொழிகளில் வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இது ரசிகர்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஜூன்18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓடிடி தளத்தில் வெளியாவதால் மொத்தம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாக இருப்பதாகத இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், ப்ரேசிலியன், ஸ்பானிஷ் – ஸ்கேட்டிலியன், ஸ்பானிஷ் – நியூட்ரல், தாய், இந்தோனேஷியன் மற்றும் வியட்நாமிஸ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
ஆனாலும், அனைத்து மொழிகளில் படத்தை ‘டப்’ செய்துள்ளனரா இல்லை, சப் டைட்டில் மட்டும் வருமா என்பதை தெரிவிக்கவில்லை.