சினிமா துறையில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த சோனு சூட்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத பல புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவது, வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் இந்தியா வருவதற்குத் தனி விமானம் அனுப்புவது, ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி செய்வது என தொடர்ந்து உதவிகளைச் செய்வதன் மூலம் மக்களின் மனதில் நடிகர் சோனு சூட் தனி இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சோனு சூட், “என் வாழ்க்கையில் சரியான கதாபாத்திரத்தைக் கண்டுபிடிக்க எனக்கு 19 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதில்தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுள்தான் இந்த உண்மையான திரைப்படத்தின் இயக்குநர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதை இன்றுவரை எனது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பிய உண்மையான பாத்திரத்தோடு என்னை இணைத்த கடவுளுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய முதல் படமான ‘ஷஹீத்- இ- அஸாம்’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? என்னுடைய பையில் ஏராளமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மும்பை நகருக்குள் நுழைந்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கியது பெரும் போராட்டமாக இருந்தது. இப்போதும் அப்போராட்டம் தொடர்வதாக உணர்கிறேன்” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *