இப்போதைக்கு அப்டேட் இல்லை என புதிய அப்டேட்

அப்டேட் என்ற வார்த்தையைக் கேட்டாலே அஜித்தும், வலிமை படமும் நினைவிற்கு வரும் அளவிற்கு அவரது ரசிகர்கள் அட்டகாசம் செய்து விட்டனர். போகும் இடங்களில் எல்லாம், பார்க்கும் ஒருவரையும் விட்டு வைக்காமல் அப்டேட் கேட்டு தொல்லை செய்து வந்தனர்.

ரசிகர்களின் செயலால் வருத்தப்பட்டு அறிக்கையே வெளியிடும் அளவுக்கு அஜித் சென்று விட்டார். கடைசியில், அஜித்தின் பிறந்த நாளுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா பரவல் காரணமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி நடிகர் அஜித் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும் போது கொரோனா நோயின் 2வது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *