அந்த டீசருக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – விஜய் சேதுபதி பட இயக்குனர் தகவல்!
”சமீபத்தில் வெளிவந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் பட டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை” என்று அந்த பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் பேசுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெள்ளியன்று வெளியானது. இந்நிலையில் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று விஜய் சேதுபதி பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் கிருஷ்ண ரோகாந்த் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
”மன்னிக்கவும்… இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.” இவ்வாறுஅவர் பதிவிட்டுள்ளார்.