நோ வே ஹோம் – ஸ்பைடர்மேன்
2019ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது ‘ஸ்பைடர்மேன்’ பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். மூன்று பேரும் மூன்று தலைப்புகளைப் பகிர்ந்திருந்ததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரபூர்வத் தலைப்பை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் படி ‘ஸ்பைடர்மேன்’ மூன்றாம் பாகத்துக்கு ‘ஸ்பைடர்மேன் – நோ வே ஹோம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.