கொட்டித்தீர்த்த கனமழை; அவசர உதவி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் கனமழை; சிதம்பரத்தில் காலை 6 மணி வரை 10 சென்டிமீட்டர் மழை பதிவு- கடலூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பரவலாக பெய்து வந்தது. 

இந்த நிலையில் காலை 6 மணிக்கு பிறகு இந்த மழை கனமழையாக பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு இந்த மழை பெய்து வரும் நிலையில். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. கனமழை காரணமாக கடலூர் லாரன்ஸ் சாலை, செம்மண்டலம், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுபோன்று மழை பெய்தால் பிற்பகலுக்குப் பிறகு தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் நிலை எழுந்துள்ளது. 

மேலும் கடலூர் மாவட்டத்தில் அதிகபடியாக சிதம்பரத்தில் காலை 6 மணி வரை 10 சென்டிமீட்டர் மழையும் காட்டுமன்னார்கோவிலில் 9.8 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. மழையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *