100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஒப்பாரி போராட்டம்

100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு 

இலவசமாக கேட்கவில்லை – வேலை செய்யும்போது பாம்பு கடித்து, பூரான் கடித்து கஷ்டப்பட்டு வேலை பார்த்துவிட்டு சம்பளம் கேட்கிறோம் – பெண்கள் வேதனை

100 நாள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வரக்கூடிய வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஒன்றிய மோடி அரசு சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னெடுப்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். அங்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென்று பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், நாங்கள் ஒன்றும் இனமாக கேட்கவில்லை. வேலையை பார்த்துவிட்டு சம்பளம் கேட்கிறோம். நாங்கள் 100 நாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது பாம்பு, பூரான் கடித்துள்ளது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் கேட்கிறோம். 

யார் யாருக்கோ வசதியாக உள்ளவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் மோடியே, எங்களுக்கு வேலை பார்த்த சம்பளத்தை கொடுங்க என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *