நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம் அமைக்க பாஜக எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம் அமைக்க பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி ஆகும். நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பின் மூலம் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டு சடலங்களை புதைப்பதற்கு தடை விதித்ததுடன் அனைவரும் எரிவாயு மயானத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்பொழுது குமாரபாளையம் பகுதியில் உள்ள ஆர்.சி. கிறிஸ்தவர்கள்  சுமார் 350 குடும்பத்தினர் மேற்பட்டோர் வசித்து வருவதால், அவர்களுக்கு மயான வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக,  மயானத்தில் ஒரு பகுதியில் கல்லறை தோட்டம் அமைக்க கடந்த 31 ஆம் தேதி நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது சுமார் 5 லட்ச ரூபாய் செலவில் எரிவாயு மயான பகுதியில் கல்லறை தோட்டம் அமைக்க இன்று பணிகள் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சரவணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் என அனைவரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் இருந்த நான்கு மயானங்களும் தற்போது மூடப்பட்டு கலைமகள் வீதியில் உள்ள இந்த எரிவாயு மயானத்தை மட்டுமே பயன்படுத்த வருவதாகவும், இங்கே புதைப்பதற்கு அனுமதி இல்லை என்ற சூழ்நிலையில், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் கல்லறை தோட்டம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையில், இது குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுத்து அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உறுதி அளித்ததன் பேரில்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். தற்பொழுது இந்த புதிய சர்ச்சையின் காரணமாக குமாரபாளையம் பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம்  நிலவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *