தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி vs முக்குலத்தோர் போஸ்டர் சண்டை

தேவர் ஜெயந்தி விழாவிற்கு எடப்பாடி வருவதற்கு தேவர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவினர் பதிலடியாக லெட்டர் பேடு அமைப்பு, குள்ள நரி கூட்டம் என போஸ்டர் ஒட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கமுதியில் வருடம்தோறும் அக்டோபர் 29, 30,31 ஆகிய மூன்று தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையும் , ஜெயந்தி விழாவும் நடைபெறும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகள் என பலவும் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்,. தென்மாவட்டங்களில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் ஆதரவு அதிகம், ஜெயலலிதா மறைவிற்கு பின் அப்படியே திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டனர். ஆனாலும் எடப்பாடி தலைமையிலான குழுவினர் தேவர் சமுதாய ஆதரவு இருப்பது போல தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். 

இந்தாண்டு தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு அச்சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விதம் விதமான போஸ்டர்கள் அச்சடித்து  மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடந்து வரும் நிலையில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில் குள்ள நரி கூட்டம், லெட்டபேடு அமைப்புகள், என குறிப்பட்டுள்ளனர். மேலும் சேலத்து சிங்கம் எடப்பாடி எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளர், மறவர், அகமுடையார் எனப்படும் முக்குலத்தோரில் ஒரு பிரிவைச் சேர்ந்த மணி மாறன் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் மாவட்ட அதிமுகவினரும் போஸ்டர் குறித்து எந்த வித கருத்தும்சொல்லாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். 

அதிமுக, பாஜக என இரு கட்சியினரும் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *