விடுமுறை நாட்களில் அதிக கட்டணம்; 119 ஆம்னி பஸ்கள் பறிமுதல்…!

ஆயுதபூஜை விடுமுறை நாட்களில், அதிக கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக, 119 ஆம்னி பஸ்களை, தமிழக போக்குவரத்துத்துறை பறிமுதல் செய்துள்ளது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, இன்றும் நேற்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு நகரங்களிலிருந்து பல லட்சம் மக்கள், பண்டிகையை கொண்டாட, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப உள்ளனர்.

இத்தனை லட்சம் மக்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு, ரயில், அரசு பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் போதிய அளவில் இல்லாததால், ஆம்னி பஸ்களை நம்பியே பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால், ஆம்னி பஸ்களில் டிக்கெட் தேடுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட, 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில பஸ்களில் வரைமுறையின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் ஆம்னி பஸ்களை சோதனையிட்டு, அவற்றுக்கு அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை, தமிழக போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 18ம் தேதியிலிருந்து இந்த நடவடிக்கை தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் அபராதத் தொகையும், பறிமுதல் செய்யப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை ஆறு நாட்கள், 13 ஆயிரத்து 66 ஆம்னி பஸ்கள் சோதனையிடப்பட்டதில், 2,092 பஸ்களில், பலவிதமான விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பஸ்களுக்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்த பஸ்களுக்கு, 27.59 லட்சம் ரூபாய் வரி விதிக்கப்பட்டு, 15.44 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து, பல விதமான விதிமீறல்களுக்காக, 119 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *