‘விவசாயம் தான் எங்களுக்கு உயிர்’ சாதித்த இரு இளைஞர்கள்

விவசாயமே வேண்டாம் என்று விவசாயத்தை விட்டு வெளியேறி வரும் விவசாயிகள் மத்தியில் விவசாயம் தான் எங்களுக்கு எல்லாம் என்று கூறி மாற்று முறையில் சிந்தித்து விவசாயத்தில் சாதித்து வரும் இரு வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த இளைஞர்களின் சாதனைக்கு சோதனையாக உள்ள விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்க 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

இயற்கை சீற்றத்தாலும் தண்ணீர் பற்றாக்குறையாலும் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயத்தை விட்டு பல விவசாயிகள் வெளியேறி பல்வேறு தொழிலுக்கு சென்று வரக்கூடிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே உள்ள தெம்மாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரும் (35) இவரது நண்பரான கொங்கதிரையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரும் விவசாயத்தை கைவிடாமல் மாற்று முறையில் சிந்தித்து விவசாய பணி மேற்கொண்டு சாதித்து வருகின்றனர்.

குறிப்பாக ராஜ்குமாரும் செந்தில்குமாரும் குண்றாண்டார் கோவில் தெம்மாவூர் கொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் இவர்களது சொந்த இடத்திலும் அதேபோல் குத்தகைக்கு நிலங்கள் பெற்று சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மற்ற விவசாயிகளைப் போல் நெல் கரும்பு கடலை சோளம் வாழை உள்ளிட்ட பயிர்களை விளைவிக்காமல் இதற்கு மாறாக குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் முலாம்பழம் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளையும் அதேபோல் செண்டிபூ கோழிக்கொண்டை கத்திரிக்காய் அதே போல் இயற்கை முறையில் ஒற்றை நாற்று நடுமுறை உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கிணற்றுப் பாசனத்தையே நம்பி உள்ள இவர்கள் கிணற்றில் மோட்டார் மூலம் நீரை எடுத்து சொட்டுநீர் பாசன மூலம் குறைந்த தண்ணீரில் விவசாய பணி மேற்கொண்டு மற்ற விவசாயிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்கள் விளைவிக்கக்கூடிய முலாம்பழம் தர்பூசணி பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் உற்பத்தி செய்யும் செண்டிப்பு கோழிகொண்டை உள்ளிட்ட பூக்களை புதுக்கோட்டை கீரனூர் திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கொண்டு சென்று விற்று வருகின்றனர். 

மேலும் ஒரே விவசாயத்தில் மட்டும் ஈடுபடாமல் பல்வேறு விவசாய பொருட்களை உற்பத்தி செய்து வரும் இந்த இரு இளைஞர்களுக்கு சவாலாக உள்ளது விவசாய பணிக்கு ஆட்கள் பிடிப்பதுதான். ஏனென்றால் அப்பகுதியில் விவசாய பணி மேற்கொண்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றும் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் 20 ஏக்கருக்கு மேல் விவசாய பணி மேற்கொள்ளாமல் தரிசு நிலமாக கிடப்பதாகவும் மேலும் தர்பூசணி விளைவிக்க கூடிய பகுதியில் கலை எடுக்க கூட ஆட்கள் கிடைக்காததால் சுமார் இரண்டு மூன்று ஏக்கருக்கு போடப்பட்ட தர்ப்பூசணி முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஒருபுறம் இயற்கை சீற்றத்தால் விவசாயம் அழிந்து வரக்கூடிய நிலையில் அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காததால் தற்போது உற்பத்தியாகும் செண்டிப்பு கோழி கொண்டை உள்ளிட்ட பூக்களக்கு உரிய விலை கிடைக்காததால் அதனை வாங்கக்கூட ஆள் இல்லாததால் செடியில் இருந்து பறித்து கீழே கொட்டக்கூடிய நிலை தொடர்ந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரக்கூடிய நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் விவசாய பணிகளை செய்ய ஆட்கள் இருப்பார்கள் அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க அரசு முன்வர வேண்டும் 

அவ்வாறு செய்தால் மட்டுமே விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்வார்கள் இல்லையென்றால் விவசாயத்தை விட்டு வெளியேறக்கூடிய நிலை தொடரும், விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று பெயரளவுக்கு பேசுகிறார்கள் அதிகபட்சம் சமூக வலைதளத்தில் விவசாயிகளுக்காக பதிவு போடுகிறார்கள் 

ஆனால் விவசாயிகளை கேலிக்கூத்தாக தான் பார்க்கிறார்கள் நாங்கள் விவசாயத்தை விடக்கூடாது என்ற காரணத்தினால் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் இதுபோல் விவசாயப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அரசு ஊக்கம் அளிப்பதுடன் அவர்களுக்கு தேவையான போதிய உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *