‘அரசுடன் சேர்ந்து வேலை செய்வேன்’ அடக்கி வாசிக்கும் ஆளுநர் ரவி

சிவகாசியில் தொழிலதிபர்களுடன்‌ நடைபெற்ற சந்திப்பில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று பேசியதாவது:- “சிறுவயதில், சிவகாசி எங்கிருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட இன்றைய தினம் சிவகாசியை அடையாளப்படுத்தும் அளவுக்கு உங்களால் இந்த ஊர் உயர்ந்திருக்கிறது. திறமையுள்ள சிவகாசி ஊர் மக்கள், நாட்டின் உயர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நிறைய பணியாற்றுகின்றனர். சுதந்திரத்திற்கு பிறகு நமது நாடு சோசியலிச எண்ணத்துடன் செயல்பட்டது.  வேலைவாய்ப்பை உருவாக்கி, நாட்டின் வளத்தை பெருக்குவதற்காக திட்டமிடப்பட்டன.

அடுத்துவந்த ஒவ்வொரு அரசாங்கமும், தனியார் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தது. தனியார் தொழில்துறையை சேர்ந்தவர் வேலை கொடுப்பவர்களாக, வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக, நாட்டை கட்டமைப்பதற்கு உதவுபவர்களாக இருந்தனர். இப்போதும் தனியார் தொழில்துறையினர், வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக, மக்களின் வாழ்வை மேலும் வளப்படுத்துபவர்களாக நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு வெற்றிகரமான முன்மாதிரி இல்லை.

ஏனென்றால், நாட்டின் முழுஆற்றலை அறுவடைசெய்யமால் நாடு வளர்ச்சியடையாது. நமது நாட்டின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கோடி அரசு ஊழியர்கள் கூட இல்லாத நிலை தான் உள்ளது. நமது திறன் அடையாளப்படுத்தபடவில்லை என்றால் நாடு வளர்ச்சியடையாது. நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் அனைவருக்கும் சமமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் மூலம் இன்று உலகளாவிய பிரச்சனைகளுக்கு கூட தலைமைதாங்க கூடிய அளவுக்கு நாடு வளர்ந்திருக்கிறது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக  நமது நாடு இருக்கிறதென்றால் அது அரசாங்கத்தால் அல்ல உங்களைப் போன்றவர்களால் தான். 2014-ல் 500 க்கும் குறைவான சிறுகுறு தொழில் நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்கும் தொழில்நுட்ப அறிவியல் ரீதியாக நாம் முன்னேறி இருப்பதுதான்‌ காரணம். 

இதன் விளைவாக இன்று ஸ்டார்டர்ப் துறையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையில் உலகின் முதல் 3 நாடுகளில் நாம் இருக்கிறோம். பசுமைசூழல் அமைப்பிலும், டிஜிட்டல்மயமாக்கலிலும் உலகின் முன்னணியில் நாம்‌இருக்கிறோம். தமிழகத்தின் கிராமப்புறங்களில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடு இந்தியா தான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் உருவாக்கி அதை வெற்றிகரமாக விண்ணிலும் செலுத்தியிருக்கிறோம்.

பாகாப்புத்துறையில், உலகில் அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும்‌ நாம், அதிக அளவில் பாதுகாப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உருவெடுத்திருக்கிறோம். கடந்த கால அறிக்கைகள்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மற்ற நாடுகளுக்கு நாம் பாதுகாப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியிருக்கிறோம். 

இன்னும் சில ஆண்டுகளில் 100 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் ஆற்றலும் நமக்கிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் காரணங்களை தாண்டித்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். நாடு முழுவதும் அரசியலாலும், சட்டத்தாலும் தான் சூழப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்கோ, தனிப்பட்ட விருப்புக்கோ இங்கு யாரும்‌செயல்பட முடியாது.

பிரதமர் மோடி நமது நாட்டின் மீதான பார்வையை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார்.  டெல்லியில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டிற்கு பிறகு உலக தலைவர்கள் அனைவரும் இந்தியாவின் 83 தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு நடக்க சம்மதித்துள்ளனர். இதுதான் புதிய வலிமையான பாரதத்திற்கான‌ அடையாளம்.  

ஜி-20 மாநாட்டிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெரிய விஞ்ஞானிகளையோ அறிவாளிகளையோ சென்று சந்திக்கவில்லை. அந்த கட்டிட உறுதுணையாக இருந்த 3200 பாமர மக்களை சந்தித்து அவருடன் பேசி அமர்ந்து உணவருந்தினார். இது பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மீது நம்பிக்கையை காட்டுகிறது. இந்த அரசாங்கம் மக்கள் மீதுள்ள‌ நம்பிக்கையில் செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்சனைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக செய்யும். பட்டாசு தொழிலானது 100 கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய வேலை. 

அப்படிப்பட்ட வேலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நான் உளமாற உணர்கிறேன். எனவே, எல்லா தடைகளை களைவதற்கும் தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கும் அரசுடன் சேர்ந்து என்னால முயற்சிகளை கட்டாயம் நான் செய்வேன்” என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *