₹19 லட்சம் மோசடி செய்த போலி ஆசிரியர் பயிற்சி நிறுவனருக்கு 22 ஆண்டு தண்டனை…!

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்துவதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் ₹19 லட்சம் மோசடி செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கலைவாணன்(64). இவரது நண்பர் வாலாஜாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கலைவாணன் ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார் என்றும் அதில் சீட் வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு கலைவாணனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 பேரிடம் மொத்தம் ₹19 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் 2019ம் ஆண்டு வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதால் இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் (ஜே.எம்) எண்-2 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு இறந்து விட்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் இந்திரா மிசையல் ஆஜராகினார். 

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் திருமால் தீர்ப்பு வழங்கினார். அதில் போலியாக ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட கலைவாணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *