பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கும் ஆளுநர்; போராட்டம் உறுதி… கி.வீரமணி எச்சரிக்கை

பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுநருக்கு எதிரான போராட்டம் “விஸ்வரூபம்“ எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (Article) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப்பட்டமாகச் செய்து – தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்!

சண்டித்தனம் செய்வதே – வாடிக்கையா? தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட வரைவுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும், அல்லது முறைப்படி திருப்பி அனுப்பாமலும் காலந்தாழ்த்தி மக்கள் அரசான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைச் செயல்படாமல் செய்ய திட்டமிட்ட சண்டித்தனத்தைச் செய்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மிக உணர்ச்சி கொந்தளிக்கும் பிரச்சினையான ‘நீட்’ தேர்வு விலக்கு போன்ற பிரச்சினையில் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதிக் கொண்டு ‘நான் ஒரு போதும் கையெழுத்துப் போட மாட்டேன்” என்ற பொல்லாத வார்த்தைகளைக்  கூறி, ஜனநாயக விரோத அடாவடித்தனத்தை அங்கலாய்ப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்!

ஏதாவது ஒரு சாக்கை வைத்து, ஒரு சிறு கும்பலைக் கூட்டி, நாளும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சனாதன சத்சங்க பிரசங்கி போல, பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரராகவே, தான் தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறும் ஓர் ஊழியக்காரர் என்பதை அறவே மறந்து விட்டு அனுதினமும் தனியே தர்பார் நடத்தி வருகிறார்!

சட்ட வரைவுகள் “கோப்பு ஊறுகாய் ஜாடி”யில் ஊறுவதற்கா? பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பழைய சட்டத்தை ஒரு பிடிமானமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை காவிமயமாக்க தனது அதிகாரத்தை அவசியமற்றுப் பயன்படுத்துகிறார்.

ஆளுநர் வேந்தராக இருப்பதை ஏற்காத சட்ட வரைவு அவரது “கோப்பு ஊறுகாய் ஜாடி”யில் ஓராண்டுக்கு மேல் ஊறிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் இல்லாத  – தலையில்லா பல்கலைக் கழகங்களாக பல மாதங்களாக  (சில ஆண்டுகளாகவே)  இருந்து வருவது கொடுமை!

பல்கலைக் கழகங்களில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்த, தனித்தனித் சுதந்திரமான பல்கலைக் கழக விதிமுறைகள் – துணைவேந்தர் நியமனம் உட்பட உண்டு. உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்பிற்குள் தேவையின்றித் தலையிடுவதா?

அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது, தான் விரும்புவது போல அச்சட்டங்களை மாற்றுங்கள், சம்பந்தமில்லாதவர்களை நியமனம் செய்யுங்கள் என்று மாநில அரசின் உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்புக்குள் இயங்க வேண்டியவைகளை மாற்றிட முறையற்ற சட்ட வரம்பு மீறிய ஆலோசனைகளைக் கூறி வரும் கொடுமை! 

இதனால் பல பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தர் கையெழுத்திட்ட பட்டங்கள் பெறுவதில் தாமதத்தின் காரணமாக அவர்கள் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 

(பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு) முன்பு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சனாதன விளக்கம் கூறும் ராஜ்பவனத்தின் துணை பெற்றவருக்கு பதவி நீட்டிப்பை ஓராண்டு அளித்து புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமலேயே அவரே அப்பதவியைத் தொடரும் வகை உதவினார் ஆளுநர்!

பல்கலைக் கழக விதிமுறைகளை மாற்றச் சொல்லி அழுத்தம் – இப்படி பல! இதற்கிடையில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்து காவல்துறை விசாரணையில் அதற்கு முகாந்தரம் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகும்கூட, அவர்கள்மீது ஊழலுக்கான வழக்குத் தாக்கலாக அனுமதி அளிக்க இந்த ஆளுநர் ஆர்.என். ரவி தயக்கம் காட்டி தனது வழக்கமான “தாமதப் பெட்டி” க்குள் போட்டு வைத்துள்ளார்.

ஊழலைச் செய்த மேனாள் அமைச்சர்கள்மீதுள்ள கோப்புகள் மேல் நடவடிக்கைக்கான அனுமதி அளிக்காது  கிடப்பில் வைத்துள்ளார் (அதிமுகவுடன் கூட்டணி வர இருப்பதால் இப்படி ஒரு பாராமுக குறுக்குச் சாலோ  என்று விவரமறிந்தவர்கள் பேசும் நிலை;  வெளிப்படை விவாதங்கள்).

மகா வெட்கக்கேடு! கண்டனத்திற்குரியது!! நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அறவழியில் நடந்து வரும் நிலையில் “எதன் மீதோ மழை பொழிந்தது” என்பதைப் போல ராஜ்பவனத்தில் இருப்பது மகா வெட்கக் கேடு!

வன்மையான கண்டனத்திற்குரியது!  ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஒரு மாபெரும் போராட்டம்   “பேருரு” எடுப்பது உறுதி! மக்கள் நினைத்தால் மாற்றங்கள் தானே வரும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *