வரதட்சணை கொடுமை; பாமக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு…!

மருகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மேட்டூர் எம்எல்ஏ பாமகவை சேர்ந்த சதாசிவம் மற்றும் குடும்பத்தார் மீது மருமகள் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24).இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு  திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம் , மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்து வந்ததாக புகாரில் கூறி உள்ளார். இந்த புகாரின்  அடிப்படையில் போலீசார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி,  ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதாவது வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    விரைவில் பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெறும் என தெரிய வருகிறது.. 

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்ப  உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *