திருக்குறளை மேடைகளில் பேசினால் மட்டும் தமிழை வளர்த்து விட முடியாது; நீதிபதி கோபம்

செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற உத்தரவிட கோரிய வழக்கு

ஒன்றிய அரசு தமிழ் மொழி மற்றும்  திருக்குறளின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு மேடைகளில் பேசினால் மட்டும் மொழியை வளர்த்து விட முடியாது

மத்தியப் பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் மொழி துறைகள் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கான இருக்கைகளை நிறுவுவதன் மூலம் பொதுமக்கள் மொழியைக் கற்கும் வாய்ப்பை உருவாக்க முடியும் – நீதிபதி கருத்து

தமிழ் வளர்ச்சி நிறுவனத்தின் கிளையை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – நீதபதி கருத்து.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் செம்மொழி என 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து மொழிகளிலும் மிகப் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியன் அதிகமானோர் தமிழர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு என ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

14 ஆயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு கடந்த மூன்று வருடங்களில் ரூ.643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22% அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், 

இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்.” என கடந்த 2021 ஆண்டு  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் ஒன்றிய அரசுக்கு ஆர்வம் உள்ளது. அதே நேரம், போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப் படவில்லை. 

தமிழ் வளர்ச்சி நிறுவனத்தின் கிளையை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ் மொழியைப் வளர்ச்சி பொறுத்தவரை தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முன்னெடுப்புகள் எதுவும் இன்னும் துவக்க வில்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் தமிழின் ஆழம் எதிரொலிக்கிறது. கலை மற்றும் இலக்கியத்திற்கு மொழி பெரும் பங்காற்றியுள்ளது.

தமிழ்நாடு  பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது  தமிழ் மொழி இந்தியாவின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் மொழியாகும்.  ஒன்றி அரசு , வழக்கின் போது வைக்கப்பட்ட வாதங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும்  தமிழின் தொன்மையையும், திருக்குறளின் முக்கியத்துவத்தையும், ஒன்றி  அரசு பல பொதுக்கூட்டங்களில் “திருக்குறள்” பற்றி பேசி வருவதாக தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மொழியை  வளர்க்க முடியாது. மத்தியப் பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் மொழி துறைகள் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கான இருக்கைகளை நிறுவுவதன் மூலம் பொதுமக்கள் மொழியைக் கற்கும் வாய்ப்பை உருவாக்க முடியும்.

எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க 16 வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *