பாகவதர் டூ எஸ்.கே வரை திரையிட்ட தியேட்டர் மூடப்படும் சோகம்; நவீனத்தோடு ஓடமுடியாமல் ஓய்த பரிதாபம் 

தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம். கே. டி. பாகவதர் ரசிகரால் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கம் பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்களின் வருகை தந்த திரையரங்கம் கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய  கலர் வண்ணம் காலம் வரையிலான காவியங்களை திரையிட்டு ரசிகர்களின் திரை பசிக்கு விருந்து படைத்த ராயல் தியேட்டர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் அரங்கம் நிறைந்து ஓடிய ஏராளமான திரைப்படங்கள், வெற்றி விழா, வெள்ளி விழாக்கள் அரங்கேறிய திரையரங்கம், நவீன தொழில் நுட்பத்துடன் போட்டி போட முடியாமல் பரிதாபமாக மூடு விழா கண்ட சோகம்

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதர், 1940 கால கட்டங்களில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் நடிப்பதற்காக கோவைக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவர் வந்து செல்லும்போது, ரயில் நிலையம் அருகே உள்ள ஆர். எச்.ஆர் ஓட்டலில் தங்குவார். இந்த ஓட்டலின் உரிமையாளரான குருசாமி, பாகவதரின் தீவிர ரசிகர். அடிக்கடி பாகவதர் கோவைக்கு வருவதனால், குருசாமியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நாடகம், திரைப்படம் மீது மோகம் அதிகமான குருசாமி, 1946 ஆம் ஆண்டு ராயல் தியேட்டரை கட்டினார். 

இந்த தியேட்டரில் முதன் முதலாக ஒளவையார் என்ற நாடகம் அரங்கேறி, ரசிகர்கள் ஆரவாரத்தில் ஒரு வருடம் வெற்றிகரமாக ஓடியது. இதனையடுத்து பாகவதர் நடித்த படம் ஒன்று ராயல் தியேட்டரில் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது. தொடர்ந்து பாகவதர் நடித்த படங்கள் திரையிடப்பட்டன. பாகவதர் மட்டுமின்றி அடுத்த தலைமுறை நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் போன்றோரின் படங்களானது திரையிடப்பட்டு, ரசிகர்களின் திரைப்பசிக்கு திரை விருந்தாக படைக்கப்பட்டிருக்கின்றன. 

எங்கள் வீட்டு பிள்ளை, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ரிக்சாக்காரன், தங்க பதக்கம், பாசமலர், அவள் ஒரு தொடர்கதை, தேவர்மகன் என்று ஏராளமான படங்கள் நாட்கணக்கில் ஓடி, வெற்றி விழா மற்றும் வெள்ளி விழாவால் அலங்கரித்திருக்கின். அதிகபட்சமாக மரோசரித்ரா திரைப்படம் 420 நாட்கள் காலை காட்சி ஓடியது.  பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், நாகேஷ், நம்பியார், கமல்ஹாசன், சரோஜா தேவி, சரிதா, மாதவி என்ற தமிழ் திரை நட்சத்திரங்களும், பீம் சிங், கே பாலச்சந்தர், கலைஞர் மு கருணாநிதி போன்ற இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்களும் இந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை சிறப்பித்திருக்கின்றனர். 

சைக்கிள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, கார், நடந்து வந்து கூட குடும்பம் குடும்பமாக படங்களை பார்த்து ரசித்த நினைவுகளை பலரும் அசைபோடுகின்றனர். திரைப்படங்களின் ஃபிலிம்களை கொண்டுவர நடக்கும் போட்டி, படங்களின் போஸ்டர், வாழை மரங்கள் கட்டி தோரணை தொங்கவிட்டு நடக்கும் கொண்டாட்டங்கள், அதனை பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் ஆரவாரங்களை, திரையிடல் அனுபவங்களை அசைபோடும்போது, அக்காலத்தை தங்களின் வார்த்தைகளால் கேட்போரின் கண்களுக்கு திரையிடுகின்றனர். 

இந்த நிலையில் பழமையன மற்றும் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று போற்றப்படுகின்ற 1980 கால கட்ட படங்களை திரையிட்ட ராயல் திரையரங்கம், புதுப்படங்களை காட்டிலும் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டினர். அவ்வாறு ரீ ரீலிஸ் செய்யப்பட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. கட்டபொம்மன், திருவிளையாடல், தங்கப்பதக்கம், ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், எங்கள் வீட்டு பிள்ளை போன்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. 

ஆனால் நவீன தொழில் நுட்பம் பெரும் தடையை தந்திருக்கின்றது. ஓரளவுக்கு நவீன தொழில் நுட்பத்தினை ராயல் திரையரங்கம் நடைமுறைபடுத்தியிருந்தாலும், அடுத்தடுத்த அதி நவீன தொழில் நுட்பத்தினை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. உயர்ந்த விலை தந்து உபகரணங்களை வாங்கும் நிலையிலும் இல்லை. பழைய பழங்களை திரையிடும் முனைப்பில் பயணித்த ராயல் திரையரங்குக்கு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பழைய படங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை . 

அதி நவீனத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கும் அளவுக்கு பொருளாதாரமும் இல்லை. இதனால் வெள்ளி விழா, வெற்றி விழாக்களை அரங்கேற்றிய திரையரங்கம் வைர விழா காணாமல் மூடு விழா கண்டது. ராயல் தியேட்டர் திரையங்கம் மூடப்படும் முன் ஓடிய படம் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி நடித்த பெரிய இடத்து பெண். பல நட்சத்திர பட்டாளங்களை திரை வடிவில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்த இடம் இன்று பார்க்கிங்காகவும், குடோனாகவும் இந்த தியேட்டர் வளாகம் செயல்பட்டு வருகின்றது. 

ஆனாலும் இந்த தியேட்டரின் ப்ரஜெக்சன் அபரேட்டர் ரூம் , ஃபிலிம் ரோல்கள், சீல்டுகள், நட்சத்திரங்களின் புகைப்படங்கள் ராயல் தியேட்டரின் நினைவுகளை பழமை மாறாமல் சுமந்துவருகின்றன. அவைகளை பார்ப்போருக்கு அக்கால நினைவுகளை தூவி செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய கலர் வண்ணம் காலம் வரை காலத்தால் அழியாத திரைப்படங்களை திரையிட்ட ராயல் திரையங்கம் மூடப்பட்டிருப்பது ரசிகர்கள், பணியாளர்கள், உரிமையாளர்கர்களுக்கு பெரும் வருத்தம் . செல்லுலாயிடில் படம் திரையிட்டு பார்த்த அந்த காலம் முதல் செல்ஃபோனில் படம் பார்க்கும் இந்த காலம் வரை பயணித்த இந்த ராயல் திரையங்கம் மூடப்பட்டிருப்பது, அக்கால திரைப்படங்களை பார்க்க ஏங்கும் ரசிகர்ளின் தாகத்தை மேலோங்க செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *