பாஜக பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கிற பாதுகாப்புகூட ஒரு அமைச்சருக்கு இல்லை! -கே.எஸ். அழகிரி

மக்களிடம் வாதங்களை வைத்து வெற்றி பெற முடியாதவர்கள் கொல்லைப்புறமாக அடக்க நினைக்கிறார்கள். சிதம்பரம் அருகே புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி. முதல்வர் பாஜகவிற்கு எதிராக பரப்பரை செய்வதால் இந்த அரசை குற்றம் சுமத்துகிறார்கள். பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பிக்கு இருக்கிற பாதுகாப்பு கூட அமைச்சருக்கு இல்லை என விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.

மோடி அரசாங்கத்தின் அமலாக்கத்துறை தமிழகத்தில் மீண்டும் இரண்டாவதாக ஒரு அமைச்சரை விசாரிக்கிறார்கள். இதில் ஒன்றும் புதுமை இல்லை. நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். பொன்முடியும், முதல்வரும் கூட இதை எதிர்பார்த்தார்கள். ஏனெனில் மோடி அரசாங்கம் இதைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு வேறு எதையும் செய்யத் தெரியாது.

மேடையில் சென்று மக்களிடம் வாதங்களை வைத்து வெற்றி பெற முடியாதவர்கள் கொள்ளைப்புறமாக வந்து அடக்க நினைக்கிறார்கள். செம்மண் அதிகமாக எடுத்து விட்டார் என்பது வழக்கு. இதற்காக எல்லாம் ஒரு விசாரணை செய்தால் என்ன ஆவது. அவர் மீது பெரிய குற்றங்கள் எதாவது இருந்தால் சொல்லுங்கள். இழிவான குற்றங்களை சொல்லாதீர்கள். மத்திய அரசுக்கு இருக்கிற உரிமைகள் மாநில அரசுக்கும் இருக்கிறது.

இங்குள்ள ஒரு மத்திய அமைச்சர் ஒரு குற்றம் செய்து விட்டு டெல்லிக்கு சென்றால் தமிழக போலீஸ் அங்கு சென்று அவர்களை விசாரிக்க முடியுமா? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி சிபிஐ அதிகாரிகளை கைது செய்து ஆணையர் அலுவலகத்தில் அமர வைத்தார். அதன் பிறகுதான் மோடிக்கு தெரிந்தது. மாநில அரசாங்கத்தின் கையிலும் போலீஸ் இருக்கிறது என்று. இதுபோன்ற சம்பவங்கள் அதற்கெல்லாம் வழிவகுக்கும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் அரிச்சந்திரர்களா? ஏன் எந்த மாநிலத்திற்கும் அமலாக்கத்துறை செல்லவில்லை. தோழமைக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பக்கம் செல்லவில்லை. இந்த ஊரிலேயே இருக்கும் தோழமைக் கட்சியின் பழைய அமைச்சர்கள் மீது ஏன் அமலாக்கத்துறை செல்லவில்லை. பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் செல்கிறார். அவர் இந்தக் கூட்டணியை மேன்மைப்படுத்துகிறார். மோடி அரசுக்கு எதிராக பரப்புரை செய்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள். இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு.

ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்ல. காங்கிரஸ் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்கள் இதற்கு தலை வணங்க மாட்டார்கள். தமிழ்நாடு ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள மாநிலம். மோடி உள்ளிட்ட யாருடைய அடக்கு முறையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மோடி அரசு எல்லோரையும் பயமுறுத்த நினைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

சி ஒட்டர் என்ற நிறுவனம்  நடத்திய கணக்கெடுப்பில் தென்னிந்தியாவில் 77 சதவீதம் பேர் மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் மோடிக்கு ஆதரவாக கணக்கெடுத்தவர்கள். மத்தியில் 33 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஏன் அவர்கள் வீடுகளில் ரெய்டு போகவில்லை. இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர், ஒரு பாஜக எம்பி மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். இன்னும் அவர் மீது விசாரணை நடத்தவில்லை. கைது செய்யவில்லை. காவல் நிலையத்திற்கு அழைக்கவில்லை.

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கிற பாதுகாப்பு கூட எதிர்க்கட்சி என்பதால் மாநில அமைச்சர்களுக்கு பாதுகாப்பில்லை. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்பது பொன்முடிக்கு நன்றாக தெரியும். முதலமைச்சருக்கும் தெரியும். நாங்கள் எல்லாம் அவர்களோடு துணையாக இருக்கிறோம்.

அண்ணாமலை 200 பட்டியல் வேண்டுமானாலும் வெளியிடட்டும். நடந்து போகட்டும். உருண்டு போகட்டும். எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. பாதயாத்திரையால் தமிழகத்தில் எதுவும் நடந்து விடாது. விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும். ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரங்களை பேசுகிறார். ஆளுநர் அவரது கடமைகளை செய்ய வேண்டும்.

தமிழக ஆளுநர் எடுத்த 3 நடவடிக்கைகளும் தோல்வி அடைந்து விட்டன. அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் அவரது நிலை. ஒரு ஆளுநர் மாளிகைக்கு இந்த அவலம் வரக்கூடாது. ஆளுநர் சிந்திக்காமல் கோபத்தில் செயல்படுகிறார். அதனால் எதுவும் வெற்றி பெறாது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *