கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலிசார் சோதனை… கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கொடநாடு பங்களாவில் இருந்து கொலை கொள்ளை  சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி போலிசார் கைபற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி கொலை , கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். 

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர்.  அவர்களுடன் 11-வது குற்றவாளியாக கனகராஜின் சாகோதரர் தனபாலும், 12-வது குற்றவாளியாக ராமேசும் சேர்க்கபட்டுள்ளனர்.

கடந்த 6 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் நிலையில் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வருகிறனர். ADSP முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலிசார் இது வரை 140-க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் கொடநாடு பங்காளாவிற்கு சென்று கொலை கொள்ளை நடைபெற்ற இடத்தில் 3-வது முறையாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

அப்போது கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைபடங்கள், மற்றும் 20 அடி அகலம் 30 அடி நீளத்தில் கட்டபட்டுள்ள ஜெயலலிதாவின் அறை மற்றும் 20 அடி அகலம் 25 அடி நீளம் கொண்ட சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூம் ஆகியவற்றில் சில பொருட்கள் என மொத்தம் 9 பொருட்களை கைபற்றிய அவர்கள் கடந்த 10-ந்தேதி மாவட்ட நீதிமன்றத்தில்  ஒப்படைத்து அது குறித்த விபரங்களையும் மாவட்ட நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொடநாடு மேலாளர் நடராஜன் மற்றும் வழக்கில் சாட்சியாளராக சேர்க்கபட்டுள்ள முனிராஜ் ஆகியோரிடம் விசாரித்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே கொலை கொள்ளை வழக்கின் புகார்தாரர் கிருஷ்ண தாபா, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனராஜ், அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள தீபு, 4-வது குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள ஜம்சீர் அலி, 10-வது குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோர்களிடம் கைபற்றபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்ப மாவட்ட நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *