கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் செல்போன் பதிவுகளை ஆய்வுக்கு அனுப்ப மனு…!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் தனபால் உள்பட குற்றம்சாட்டபட்டுள்ளோர்களிடம் பறிமுதல் செய்யபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டுள்ள 8 செல்போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வுக்கு அனுப்ப கோரி சிபிசிஐடி போலிசார் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிபதியிடம் இன்று மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி கொலை , கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். 

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர்.  

இந்நிலையில் கடந்த 6 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மாவட்ட நீதிபதி  அப்துல் காதர் விசாரணையை தீவிரபடுத்துமாறும் இது வரை நடைபெற்றுள்ள விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ADSP – முருகவேல், DSP-கள் சந்திர சேகர் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் இன்று மாவட்ட நீதிபதியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் தனபால் உள்பட குற்றம்சாட்டபட்டுள்ளோர்களிடம் பறிமுதல் செய்யபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டுள்ள 8 செல்போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்ய கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப கோரியிருந்தனர். 

இதனையடுத்து ஓரிரு நாட்களில் அந்த 8 செல்போன்கள் நீதிமன்றத்தின் மூலமாக ஆய்வுக்கு அனுப்பி வைக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் வரும் 28-ந்தேதி வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலிசார் நடத்திய விசாரணை குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யபடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *