பரோட்டா  சாப்பிட்ட 38 பேருக்கு வயிற்றுப்போக்கு… ஓட்டலுக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு 

சேந்தமங்கலம் தனியார் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அந்த ஓட்டலை மூடி சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, குருமா போன்ற உணவினை வாங்கி சாப்பிட்ட சேந்தமங்கலம் பகுதி, பச்சுடையாம்பட்டி புதூர் காலனி, குறவர் காலனி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 38 பேருக்கு வயிற்றுப்போக்கு அவர்கள் அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா சேந்தமங்கலம் நேரில் சென்று, பரோட்டாவிற்பனை செய்த தனியார் ஹோட்டலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பரோட்டா சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு, சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 நோயாளிகளை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

பின்னர், சேந்தமங்கலம் கடைவீதியில் இயங்கி வந்த மளிகை கடை, பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களை அவர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.12,000/- அபராதம் விதித்து, பேரூராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் ஆட்சியர் டாக்டர் உமா தெரிவித்ததாவது சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி மெஸ் என்ற தனியார் ஹோட்டலில் கடந்த 3.6.2023 அன்று விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, குருமா போன்ற உணவினை வாங்கி சாப்பிட்ட பச்சுடையாம்பட்டி புதூர் காலனி, குறவர் காலனி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 38 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி மெஸ் தனியார் உணவகம் தற்காலிகமாக, தடை செய்து  உணவகத்திற்கு சீல் வைக்கபட்டுள்ளது. மேலும்  இத்தனியார் உணவகத்தில் உணவு அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளித்த, சேந்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர், மக்கள்  நல்வாழ்வுத்துறைக்கு உரிய தகவல் வழங்காத காரணத்தினால் பொது சுகாதாரம் தொற்று நோய் சட்டத்தின்படி அந்த டாக்டருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. 

தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார். இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பச்சுடையம்பட்டியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *