ஆவின் அமோனியா வாயு கசிவு ஒரு மணி நேரம் போராடி சரி செய்த தீயணைப்பு வீரர்கள்…!

aavin

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நவீன ஆவின் பாலகத்தில் பாலை குளிரூட்ட பயன்படுத்தும் அமோனியா வாயு கசிந்ததால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கண்ணெரிச்சல் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் பதறி அடித்து வெளியேறினார், நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து பதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ‌வாயு கசிவால் பால் குளிரூட்டப்படும் இயந்திரம் நிறுத்தப்பட்டதால் பால் கெட்டு போகும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தினர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நவீன ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பாலகத்தில் தினசரி 60 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு அங்கு உள்ள குளிரூட்டும் மையத்தில் பதப்படுத்தப்பட்டு பின்னர் ஊழியர்கள் மூலம் பா பாலை பாக்கெட்டில் அடைத்து மாவட்டம் முழுவதும் பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினசரி ஆவின் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆவின் பாலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டு சிப்ட்டுகளாக பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் இன்று பக்ரீத் விடுமுறை தினத்தை முன்னிட்டு 40 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். 

இந்நிலையில் திடீரென பால் குளிரூட்ட பயன்படுத்தக்கூடிய அமோனியா வாயு செல்லும் பைப் லைனில் வாசர் கழண்டு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கண்ணெரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஊழியர்கள் பதறி அடித்து பாலகத்தை விட்டு வெளியேறினர். மேலும் இந்த நவீன ஆவின் பாலகம் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் மூச்சு திணறல் கண்ணெரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். பின்னர் அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்த முயன்றனர். 

ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து பின்னர் பாதுகாப்பு உடை அணிந்து வீரர்கள் அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்த முயன்ற போது அவர்களுக்கும் மூச்சு திணறல் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்த வீரர்கள் வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆளாகினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மூச்சுத் திணறல் கண்ணெரிச்சலை மீறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தினர். 

மேலும் அமோனியா வாயு கசிவால் நவீன ஆவின் பாலகத்தில் செயல்படக்கூடிய குளிருட்டு இயந்திரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கெட்டுப் போகக்கூடிய அபாயம் இருந்த நிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தியதால் பால் கெட்டுப் போகக்கூடிய நிலை தவிர்க்கப்பட்டது. மேலும் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட பைப் லைனை சரி செய்ய திருச்சி மற்றும் மதுரையிலிருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவர் வரவழைக்கப்பட்டு அதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த நவீன ஆவின் பாலகத்தில் அவ்வப்போது அமோனியா கசிவு சிறிதளவு ஏற்பட்டு வந்த நிலையில் அது ஊழியர்களை பாதிக்காமல் இருந்து வந்ததாகவும் ஆனால் இதுவரை எப்போதும் ஏற்படாத வகையில் அமோனியா வாயு கசிவு அதிகளவு இன்று ஏற்பட்டதால் ஊழியர்கள் மூச்சு திணறல் கண்ணெரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை தகுந்த நடவடிக்கைகளையும் பால் குளிரூட்டும் மையத்தில் பராமரிப்பையும் முறையாக செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *