ஒரே பதிவு எண்ணில் ஆவினில் நாள்தோறும் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் மோசடி…!

வேலூர் ஆவினில் பல மாதங்களாக ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி நாள்தோறும் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடி மோசடி நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின் ) தலைமை அலுவலகம் உள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் லிட்டருக்கு மேலாக இந்த நிறுவனத்திலிருந்து சென்னை திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் முகவர்களுக்கு பணம் கட்டிய பின்னரும் ஆவின் பால் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பால் கொள்முதல், விநியோகம், பால் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் நிலவி வந்த பிரச்சினைகளை பயன்படுத்திக் கொண்டு பால் திருடும் சம்பவங்களும் அரங்கேறி வந்தது.

விநியோகப் பிரிவில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் பல மாதங்களாக ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி நாள்தோறும் 2500 லிட்டர் பால்  திருட்டு சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. ஆண்டு கணக்கு தணிக்கையின் போது பல லட்சம் லிட்டர் பால் திருடு போனது தெரியவந்ததை அடுத்து பால் திருட்டை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.

இதனை எடுத்து கடந்த சில நாட்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில் பால் திருடி செல்வது தெரிய வந்தது இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார் இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவினில் தொடர்ந்து பால் விநியோகத்தை கண்காணித்து வந்த அதிகாரிகள் தினந்தோறும் பால் திருடப்பட்டு வருவதை கண்டறிந்தனர். பால் விநியோக பிரிவில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி அதில் தினமும் சுமார்  2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடி சென்றது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.

இதனை அடுத்து பால் திரட்டில் ஈடுபட்ட ஒரே பதிவில் கொண்ட இரண்டு வேன்களையும் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வேலூர் ஆவினில் பால் அளவு நாள்தோறும் குறைந்தபடியே இருந்ததல் அனைத்து பால் வாகனங்களின் கண்காணிப்பையும் தீவிர படுத்திய நிலையில் நேற்று வேலூர் ஆவினில் இருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயக்குவது தெரியவந்தது.

இதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வரையிலும் பால் திருடி இருப்பதும் இப்படி பல மாதங்களாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து சென்னை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு பால் திருடி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் ஆவினில் பல மாதங்களாக பல லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *